சென்னை: தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தஞ்சாவூர் சரக காவல் ஆய்வாளர் தலைமையில் கடந்த 8ஆம் தேதி தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ஒரு கார் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அவர்கள் சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (52), தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜ்குமார் (36), திருவாரூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (28), ஜெய்சங்கர் (58), கடலூரைச் சேர்ந்த விஜய் (28) என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வாகனங்களை சோதனை செய்தபோது காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழங்கால இரண்டரை அடி உயர உலோக பெருமாள் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயின் தந்தை 12 ஆண்டுகளுக்கு முன்பு தொழுவூர் ஆற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட போது இந்த சிலை கிடைத்ததாகவும், இதை வீட்டிற்கு கொண்டு வந்து பதுக்கி வைத்திருந்ததாகவும், இந்த நிலையிலேயே தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த பழங்கால உலோக பெருமாள் சிலையை இரண்டு கோடி ரூபாய்க்கு வெளிநாட்டுக்கு கடத்த மூயனதாகவும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு பாதுகாப்பாக இருசக்கர வாகனங்களில் வந்த கடலூர் பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார் (26), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஷ் (28) ஆகிய இருவரையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஏழு நபர்கள் மீதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி ஏழு பேரையும் சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, பழங்கால உலோக பெருமாள் சிலையையும் கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதற்கிடையே, பறிமுதல் செய்யப்பட்ட பழங்கால உலோக பெருமாள் சிலை குறித்து ஆய்வு நடத்திய போது இந்த சிலை சுமார் 15 முதல் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தெரியவந்துள்ளது. மேலும், இந்த சிலையானது சோழர் காலத்தில் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் இது தமிழ்நாட்டில் அறியப்படாத கோயிலில் இருந்து திருடப்பட்டு இருக்கலாம் என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சிலை எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா எனவும் சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய கே.வி.குப்பம் சார்பதிவாளர் சஸ்பெண்ட்.. வீடியோ பரவிய நிலையில் அதிரடி!