சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 4 ஆயிரம் உதவி விரிவுரையாளர் பணிக்கு ஏற்கனவே ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது மே 15ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் செட் தேர்வினை 2024 ஆகஸ்ட் மாதம் எழுத உள்ளவர்களும், இதில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5 மணி வரை, www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் மே 15ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசின் செட் தேர்வு 2024 ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறுகிறது. அதனை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்தவர்களும், இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அவர்கள் எழுத்துத் தேர்விற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். தமிழ்நாடு அரசின் செட் தேர்வில் தகுதிப்பெற்றால் மட்டுமே நேர்காணல் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.
மேலும், இந்த அறிவிப்பின் மூலம் 3 ஆயிரத்து 921 நடப்பு காலிப் பணியிடங்கள் மற்றும் 79 பின்னடைவு காலி பணியிடங்கள் என மொத்தம் 4 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறைப்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், ஜூலை 1, 2024ல் 57 வயது முடியாதவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறையின் படியும், உயர் கல்வித் துறையின் அரசாணையின் அடிப்படையிலும், நெட் (NET - National Eligibility Test) அல்லது செட் (SET - State Eligibility Test) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியைப் பாடமாக எடுத்துப் படிக்காமல், பிற மொழிகளை எடுத்துப் படித்தவர்கள், தமிழ் மொழி தேர்வில் பணி நியமனம் செய்யப்பட்ட இரண்டு ஆண்டுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
உயர் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தது போன்று, கௌரவ விரிவுரையாளர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இதற்காக அவர்கள் பணி அனுபவச் சான்றுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள படிவத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். கலை பாடப் பிரிவுகள், வணிகவியல், மானுடவியல், கல்வியியல், சமூக அறிவியல், அறிவியல், உடற்கல்வி, இயல், இதழியல் மற்றும் தொடர்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தேர்வு முறை: உயர் கல்வித்துறையின் அரசாணை அடிப்படையில், 200 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். மேலும், நேர்முகத் தேர்விற்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதுகலை பாடங்களில் இருந்து போட்டி தேர்வு கேள்விகள் இடம் பெறும். ஏற்கனவே, 2019ஆம் ஆண்டில் சுமார் 32 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
ஆனால், இவர்கள் பேப்பர் மூலம் விண்ணப்பம் செய்துள்ளதால், மீண்டும் ஆன்லைன் மூலம் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள், கட்டணங்களைச் செலுத்தத் தேவையில்லை. ஆனால், புதிய விண்ணப்பத்தில் உள்ளது போல் பணி அனுபவத்திற்கான சான்றிதழ்களைப் பெற்று, பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயம்" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்ன? - Schools Education Department