சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் வங்கி மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்தனர். இதில் விசாரணை நிறைவடையாததால், வழக்கு வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 56வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஒரு ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, சாட்சி விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் சிட்டி யூனியன் வங்கி, கரூர் கிளையின் தலைமை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமார் கடந்த வாரம் சாட்சியம் அளித்தார்.
இந்நிலையில், சாட்சிகளின் குறுக்கு விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் முதல் சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ள கரூர் சிட்டி யூனியன் வங்கியின் தலைமை மேலாளர் ஹரிஷ்குமார் நேரில் ஆஜரானார். அவரிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கெளதமன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
அதில், செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா மற்றும் சகோதரர் அசோக் குமாரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்களை சாட்சிக் கூண்டில் நின்றவாறு ஹரிஷ்குமார் பதிலளித்தார். மேலும், வங்கியின் ஆவணங்கள், கவரிங் லெட்டர் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் செந்தில் பாலாஜி தரப்பில் குறுக்கு விசாரணையில் கேட்கப்பட்டுள்ளது.
ஆனால், குறுக்கு விசாரணை நிறைவடையாததால் வழக்கின் விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அல்லி, அதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலையும் நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 56வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “தவறுகளை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்காதீர்கள்..” அன்பில் மகேஷ் வலியுறுத்தல்!