தூத்துக்குடி: தூத்துக்குடி சங்கு காலனி மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் களஞ்சியம் - கணேஷ்வரி தம்பதியின் கடைசி மகனான மாரிச்செல்வம் என்ற அசால்ட் (24). மீனவரான இவரை கடந்த ஜூன் 21ஆம் தேதி சிறுவர்கள் தாக்கி கை, கால்களை கட்டி உயிருடன் குழி தோண்டி புதைத்து விட்டனர். இது தொடர்பாக, இரு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். கைதான இருவர் போலீசில் வாக்குமூலம் அளித்தனர்.
வாக்குமூலம் விவரம்: தூத்துக்குடி லுர்தம்மாள்புரம் சுடுகாடு அருகே நாங்கள் மது அருந்துவது வழக்கம். அங்கு மாரிச்செல்வம் வந்தபோது எங்களுக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் நட்பாக பழகியவர், அதன் பின்னர் அடிக்கடி எங்களிடம் தகராறு செய்து அடிப்பதும், செல்போனை பறித்துக் கொள்வதுமாக இருந்தார். கடந்த ஜூன் 20ஆம் தேதி வழக்கமான இடத்தில் நாங்கள் சந்தித்தபோது எங்களை மீண்டும் தாக்கினார். எங்களது நண்பர் ஒருவரது செல்போனை உடைத்து விட்டார். இன்னொரு நண்பரின் செல்போனை கடலில் தூக்கி வீசிவிட்டார்.
இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினோம். அதன்படி, அவரை தூத்துக்குடி, லுர்தம்மாள்புரம் சுடுகாட்டுப் பகுதிக்கு மது அருந்த வரும்படி அழைத்தோம். அவரும் வந்தார். சம்பவ இடத்தில் அவருக்கு முழு போதை ஏறியதும் அவரை செங்கலால் தாக்கினோம். அவர் மயங்கியதும், அவரது கை, கால்களை கட்டி அங்கேயே குழிதோண்டி புதைத்து விட்டு தனித்தனியாகச் சென்று விட்டோம். இவ்வாறு இருவரும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான இருவரும் தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில் இருவரும் திருநெல்வேலியில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த தூத்துக்குடி லுர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த மலையழகுவின் மகன் சந்தனகுமார் (24) என்பவரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். இதையடுத்து, வழக்கில் கைதானோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ள நிலையில் மேலும் இரு சிறுவர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்ய அனுமதி - சென்னை உயர் நீதிமன்றம்! - Armstrong Murder