புதுக்கோட்டை: திருமயம் அருகே லெம்பலக்குடியில் உள்ள இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில், அவர்களுக்கென புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளைத் திறந்து வைக்க, இன்று (பிப்.6) சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாட்டுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் புதுக்கோட்டைக்கு வந்தார்.
அங்கு அவர் ரோஜா இல்லம் என்ற விருதுநகர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், "சிறுபான்மையினர் நலனில் அக்கறை உள்ள ஆட்சி என்று நிரூபிக்கும் வகையில், அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருகிறது. மசூதியாக இருந்தாலும், தர்காவாக இருந்தாலும், தேவாலயமாக இருந்தாலும், அடக்க ஸ்தலமாக இருந்தாலும், அதனைப் பாதுகாத்தும், மராமத்து செய்கின்ற பணிக்காகவும் நிதி உதவி அளித்து வருகிறோம்.
இதற்காக உலக மக்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு, அனைத்து பணிகளும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழர்களின் முகாம்கள் 106 இருக்கின்றன. அந்த முகாம்களின் உள்ள 20 ஆயிரம் குடும்பங்களுக்கும், அதில் உள்ள 60 ஆயிரம் மக்களுக்கும், பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அகதிகள் என்ற வார்த்தையை எடுத்து விட்டு, மறுவாழ்வு முகாம் என்ற பெயரைக் கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு. கடல்தான் நம்மை பிரித்துள்ளது. தமிழர் என்ற உறவு நம்மை எப்போதும் இணைத்துதான் உள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசிடம் அனுப்பி உள்ளோம். முதல் கட்டமாக, இலங்கையில் இருக்கக்கூடிய அரசாங்கம், தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கையை கூர்ந்து பார்த்து, அந்த உரிமைகள் எல்லாம் அவர் பெற்றுக் கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளது.
மேலும், இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்கவில்லை என்றால், கேள்விக்குறியாக இருந்து விடுவோம் என்ற எண்ணத்தில், சென்ற மாதம் இலங்கை தூதுகரத்தில் இருந்து ஆளுநரும், நானும் கலந்து கொண்டு, முதன் முதலாக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 200 பேரை தேர்வு செய்து, இலங்கை அரசால் கொடுக்கப்பட்ட குடியுரிமை மூலம் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.
மீண்டும் தமிழ்நாட்டின் சார்பில் முதல் கட்டமாக வந்தவர்களுக்கு, உரிமைகள் வழங்குவதற்கான குழு அமைத்து, சட்டத்துறை அமைச்சர் ஆலோசனைப்படி சட்டக்குழு ஒன்று அமைத்து தீர்வு காணப்படுகிறது. மிக விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் நினைத்ததை முடிப்பார். அவர் எடுக்கின்ற எல்லா முயற்சிகளும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற முயற்சியே. இதற்கு மக்கள் ஆதரவாக இருக்கின்றனர்.
அதேபோல், இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றனர். எதிர்காலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமையைப் பெற்றுத் தரும். தமிழ்நாடு முதலமைச்சர், இலங்கைத் தமிழர்களில் உள்ள மாணவர்களுக்கு, பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கும். வேளாண்மை கல்லூரியில் சேர்வதற்கும் அனுமதி வழங்கும். ஆனால், மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குத்தான் சட்ட சிக்கல் இருக்கின்றது.
ஆனால், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, நீட் தேர்வு என்ற அரக்கனை அகற்றிவிட்டு, அதில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் விடிவுகாலம் வரும்போது, நம்மோடு இருக்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கும் விடிவுகாலம் வரும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமமானது. அதில் எல்லோரும் சமம். நீதிமன்றங்களின் தீர்ப்பை விமர்சிக்க விரும்பவில்லை. நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் வரவேற்கின்றோம், மதிக்கின்றோம்.
அதில் ஏதும் சிக்கல் இருந்தால், அரசு மேல்முறையீடு செய்யும். மறுவாழ்வுத் துறையின் சார்பில், சட்ட ரீதியாக அதற்கு முடிவுகள் ஏற்படும். ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களின் நலன் சார்ந்தது எங்களது கோரிக்கை. தமிழ்நாட்டைத் தவிர்த்து மற்ற மாநிலத்திலும், மற்ற நாடுகளிலும் உள்ளவர்களுக்கு இந்திய அரசுதான் முடிவினை எடுக்க வேண்டும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்" என்றார்.
இதையும் படிங்க: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை!