சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான வி.கே.சசிகலா, பிளவுபட்ட அதிமுகவை ஒன்றிணைக்க தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார். இதற்காக பல முக்கிய நபர்களை சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து, 2021 சட்டப்பேரவையில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக, திடீரென அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை.
இதனை அடுத்து, அதிமுகவில் இருக்கக்கூடிய அனைத்து தொண்டர்களையும் ஒருங்கிணைப்பதே தனது தலையாய கடமை என கூறி வந்தார். இந்நிலையில், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக, 7 இடங்களில் டெபாசிட் இழந்து, 40 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.
இத்தகைய சூழலில், "அதிமுகவை ஒன்றிணைக்கவும், 2026-ல் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க இருப்பதாக" சசிகலா தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக 'அம்மாவின் வழியில் மக்கள் பயணம்' என்ற தலைப்பில் இன்று (ஜூலை 17) முதல் தென்காசி மாவட்டத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். மேலும், 2-வது நாளாக நாளை (ஜூலை 18) கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும், 19ஆம் தேதி சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிகளிலும், 20ஆம் தேதி வாசுதேவநல்லூர் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சசிகலாவின் சுற்றுப்பயணம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில் அவர், "தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அதிமுக ஒன்றுபட வேண்டும். அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் பிரிந்து சென்றவர்கள் ஒன்றுகூட வேண்டும்.
சசிகலாவின் மக்கள் சந்திப்பின் முயற்சி என்பது கட்சியை ஒன்றுபடுத்த வேண்டும் என்பது போல் உள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமி பிரிந்தவர்களை சேர்க்கமாட்டேன் என சொல்லி வருகிறார். தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகளிடம் கட்சியை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இருக்கிறது.
ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சேர்த்துக் கொண்டால் கட்சி ஒற்றுமையாக இருக்கிறது என மக்கள் உணர்வார்கள். கட்சிக்கும் வாக்களிக்கும் சூழல் உருவாகும். கட்சிக்கும் செல்வாக்கு ஏற்படும். ஆனால், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பதவி பறிபோகும் என பயந்து பிரிந்தவர்களை சேர்க்கமாட்டேன் என சொல்லி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி ஒரு வழிகாட்டு குழுவை அமைத்து பிரிந்தவர்களை ஒன்று சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மூலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இணைந்தபின் ஒற்றை தலைமையை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பிரிந்தவர்களை பார்த்து பழனிசாமி ஏன் பயப்பட வேண்டும்?
சசிகலா தற்போது ஒற்றுமைக்கான ஒரு காரியத்தை கையில் எடுத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியும் இறங்கி வந்தால் அதிமுக ஒற்றுமைக்கான வாய்ப்பு உள்ளது. அதிமுக ஒன்றிணைந்தால் இது நல்ல பலனைக் கொடுக்கும்; அது தமிழ்நாட்டுக்கும் நல்லதாக இருக்கும்.
எடப்பாடி தனது ஈகோவை விட்டுக் கொடுத்து பிரிந்து சென்ற தலைவர்களுக்கு அழைப்பு கொடுக்க வேண்டும். உடனடியாக பொதுக்குழுவைக் கூட்டி, பிரிந்து சென்றவர்களை சேர்க்கலாமா, வேண்டாமா என நிர்வாகிகளிடம் கேட்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியும் ஈகோவைவிட்டு கட்சி ஒற்றுமைக்கான முயற்சியை எடுக்க வேண்டும்" என்று ப்ரியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.2,000 கோடி நிதி நிறுத்திவைப்பா? PM Shri திட்டத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?