திருநெல்வேலி: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திருநெல்வேலி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் இல்லத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 25 தொகுதிகள் 50 தொகுதிகள் என வெற்றி வாய்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி மாம்பழத்தை ஒப்பிட்டு ஆட்சியாளர்களின் தோல்வி குறித்து விமர்சித்துள்ளார்.
மோடி ஆட்சியில் அதிகாரிகளாக இருந்தவர்களே தற்போது அவருக்கு எதிராகப் பேசி வருகிறார்கள்.
எங்களது வேட்பாளர் இறக்குமதி வேட்பாளர் எனக் கூறுவது தவறானது. கர்நாடகத்தில் பிறந்து தமிழகத்தில் வந்து நடிக்கிறார், அரசியல் செய்கிறார் ரஜினிகாந்த் அவரை எதுவும் கூறுவதில்லை.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ரூ.4 கோடி பிடிக்கப்பட்ட விவகாரத்தில், ஒரு வாரம் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆணையம் கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி கடல் போன்றது. அதில் ஒரு சில உட்கட்சி பூசல்கள் அலை போல இருக்கத்தான் செய்யும். நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் சரியாகச் செயல்படவில்லை என மொட்டை கடிதாசி அனுப்பியுள்ளனர். அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எங்களுக்குள் எவ்வித பிரிவினையும் இல்லை.
திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி உறுதியாகிவிட்டது. எதிரிகளே எங்களுக்கு இங்கு இல்லை. இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்குமான தேர்தல் பாரதிய ஜனதா கட்சியில் ஜனநாயகம் இல்லை. பாஜக கட்சியினர் கடந்த 2014 ஆம் ஆண்டு கச்சத்தீவு குறித்துப் பேசியதற்கும், தற்போது பேசுவதற்கும் பல்வேறு மாறுபாடுகள் உள்ளது. தேர்தலுக்காகப் பேசி வருகிறார்கள். தலைவர்கள் பேசும்போது, குற்றம் சாட்டும் போது அதில் நேர்மை வேண்டும். அந்த நேர்மை அவர்களிடம் இல்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர்... - ELECTION FLYING SQUAD