சென்னை: மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "இந்த தேசத்திற்கு எதிராக ஏதாவது வருகிறது என்றால், எப்போதும் தமிழ்நாட்டில் இருந்து தான் தீப்பொறி பறக்கும். மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் தீப்பொறியை தமிழ்நாட்டில் இருந்து கிளப்பி உள்ளது.
வேளாண் சட்டங்களை எப்படி திரும்பப் பெற்றார்களோ, அதேபோல் இந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம். இந்த போராட்டத்தின் மூலமாக தேசத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கப்போகிறது. எதை எடுத்தாலும் சமஸ்கிருதம், இந்த தேசத்தின், உலகத்தின் மூத்த மொழி தமிழ் என்று அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அந்த சட்டத்தைப் படிக்கும்போது சமஸ்கிருதத்தில் 3 சட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். அதில் ஒரு சட்டம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்றால், அது பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம், அதை நாம் எவ்வளவு காலம் வைத்திருப்பது என சொல்கிறார்கள். அதில் ஒரு சட்டம் இந்தியாவில் இயற்றப்பட்டது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்.
இன்று(06.07.2024) சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் பா.ஜ.க. அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்கள், 'இந்திய திருநாட்டின் நீதி பரிபாலனத்திற்கும் - மாநில சுயாட்சிக்கும்- மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்பதோடு, இச்சட்டங்கள்… pic.twitter.com/E66IAMnrvp
— Selvaperunthagai K (@SPK_TNCC) July 6, 2024
அப்பொழுது இவ்வளவு காலம் நிலுவையிலுள்ள வழக்குகள், குற்றப்பத்திரிகைகள் என்ன ஆகப் போகின்றது என்ற கேள்வியும் எழுகின்றது. இந்த தேசத்திற்கும், தேச மக்களுக்கும் எதிராக சிந்தித்துக்கொண்டு இருக்கின்ற நாக்பூர் தலைமையகம், குறிப்பாக தமிழை, தமிழ் மொழியை எப்படியெல்லாம் சீர்குலைக்க முடியும் என்று முயற்சி செய்தார்கள். அது முடியவில்லை.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டிலிருந்து தான் தீப்பொறி பற்றி உள்ளது. அனைத்து மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இந்த நாட்டில் எது ஜனநாயகமாக இருக்கிறதோ, அதைச் சிதைக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் கொள்கை. இதை அனைத்தையும் மக்கள் புறந்தள்ளி உள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களில் தமிழ்நாடு தான் வென்றுள்ளது. இந்த தேசத்தில் எந்த மாநிலத்திலும் 100 சதவீதம் வெற்றி பெறவில்லை. தமிழ்நாட்டில் தான் 100 சதவீதம் வெற்றி கிடைத்தது. அதற்கு காரணம், நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் தான். தொடர்ந்து இந்த போராட்டத்தில் இறங்க வேண்டும் என்று ராகுல் காந்தி சொல்லி உள்ளார். தேசத்திற்குத் தேவையான போராட்டம், மக்களுக்கு தேவையான போராட்டம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "புதிய குற்றவியல் சட்டங்களை சட்டக்குழுவிற்கு பரிந்துரைக்க வேண்டும்" - ப.சிதம்பரம் வலியுறுத்தல்! - p chidambaram