கரூர்: இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதி மணியை ஆதரித்து, கரூர் உழவர் சந்தையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு, வாக்கு சேகரித்தார்.
- '
அப்போது செல்வப்பெருந்தகை கூறுகையில், “கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மீது, பாரதிய ஜனதா கட்சி அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சி காரணமாக, சிறையில் அடைத்து அமலாக்கத்துறை மூலம் உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தும், ஜாமீன் வழங்க நீதிமன்றம் மூலம் அநீதி இழைக்கப்படுகிறது.
இன்னும் சில தினங்களில் செந்தில் பாலாஜி நீதிமன்ற உத்தரவு பெற்று, வெளியே வருவார். அதற்கான நேரம் தற்பொழுது கூடியுள்ளது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி எதை வைத்து, வாக்கு சேகரிக்க வருகிறார்கள். தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்தது பாஜக. உரிமைகளைப் பறிப்பதற்குத் துணை போனது அதிமுக. இவர்களில் ஒருவர் விரோதி, இன்னொருவர் துரோகி. வாக்காளர் பெருமக்கள் சிந்திக்க வேண்டும். இந்த தேர்தல் என்பது தேசத்தைக் காப்பாற்றுவதற்கான தேர்தலாக, 18வது மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நாட்டையும் மண்ணையும் பாதுகாக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால், கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் ஜோதி மணியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கையொப்பமிட மறுத்த உதய் திட்டத்தில், எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் அப்போதைய மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கையெழுத்திட்டார்.
அன்று முதல் இன்று வரை மின்சார கட்டண நிர்ணயம் ஒன்றிய அரசு வசம் சென்றது. தமிழ்நாட்டு உரிமைகளை ஒன்றிய அரசிடம் பறி கொடுத்த அதிமுகவுக்கு எப்படி இந்த தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்க முடியும். இந்த தேர்தலை பொருத்தமட்டில் இருவரை நாம் ஞாபகத்தில் வைத்து வாக்களிக்க வேண்டும். நமது உரிமைகளைப் பறித்தவர் மோடி, மற்றொருவர் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பவர் அவர்தான் நமது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியை பொருத்தமட்டில் இங்கு நிறுத்தப்பட்டிருக்கும், வேட்பாளர் ஒரு அபூர்வ வேட்பாளர், அதிசய வேட்பாளர், இந்த வேட்பாளர் ஜோதி மணியை, ராகுல் காந்தியும் தமிழக முதலமைச்சரும் அனுப்பி வைத்துள்ளனர். இந்திய நாடாளுமன்றத்தில் ஜோதி மணி ஆற்றிய உரைகளைப் பாருங்கள், புல்லரிக்க வைக்கும் உரை தமிழ்நாட்டு உரிமைகளுக்காகவும், இந்தியத் தேசத்தின் உரிமைகளுக்காகவும் பேசியவர்.
ஜோதி மணியைப் பார்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் பெண்மணியைப் போல மிகவும் எளிமையான முகத்தோற்றம் கொண்டவராக, ஜோதிமணி உள்ளார் என கூறுகின்றனர். அந்த அளவுக்கு உண்மையான, நேர்மையான, உன்னதமான, கண்ணியமான பெண்மணியை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் வாக்கு எண்ணிக்கை அதிகப்படியான வித்தியாசத்தில், இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். அதில், கரூர் தொகுதி முதன்மைத் தொகுதியாக இருக்க வேண்டும்” என்றார்.