திருநெல்வேலி: திருநெல்வேலி மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தில் மோதல் ஏற்பட்டு தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர். அதன் 25வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற குழுத் தலைவர் ராஜேஷ் குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 17 பேரை நினைவுகூறும் வகையில் அரசு சார்பில் நினைவு ஸ்தூபி அமைக்க வேண்டும். மாஞ்சோலை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் காங்கிரஸ் கட்சி நிற்கிறது.
தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம், மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும். மத்திய நிதிநிலை அறிக்கை ஆந்திரா, பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களுக்காக மட்டுமே போடப்பட்டுள்ளது போல் தெரிகிறது, இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவிற்கானதாக இல்லை. தமிழ்நாட்டைப் பற்றியோ, தமிழ் பற்றியோ ஒருமுறை கூட நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையில் பேசவில்லை. வெள்ள நிவாரண தடுப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவு பாஜக ஆளும் மாநிலங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் இந்த பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையிலும், ஒரு பைசா நிதி கூட தமிழகத்திற்கு ஒதுக்கப்படவில்லை. அமைச்சரவையை தக்க வைக்கவும், அதிகார ஆயுளை நீட்டிக்கவும், ஆட்சியை தக்க வைக்கவும் இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய அரசு காப்பி அடித்து இந்த நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மக்கள் எந்த காலத்திலும் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் பாசிச சக்திகளை தமிழ்நாடு மக்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்” என கூறினார்.
அதேபோல், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த தொழிலாளர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, ”நீதிமன்றத்தில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வழக்கு இன்னும் முடிவு பெறவில்லை. இப்போதும் தமிழ்நாடு அரசுக்கு சரியான புரிதல் இல்லை என்றார்.
மேலும் மாநில அரசின் செயல்பாடு மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை பொறுத்த வரை நேர்மையாக இல்லை என்றும், தமிழ்நாடு அரசின் அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில் சமூக நீதி இல்லை எனவும், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வேலையை பறித்துவிட்டு அவர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பை கொடுப்பதா என தமிழ்நாடு அரசின் நிலை அறிக்கை மீது கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார். எனவே மாஞ்சோலை விவகாரத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மாஞ்சோலை விவகாரம்: அமைச்சரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த தொழிலாளர்கள்! - Manjolai workers petition