சென்னை: நடிகை கெளதமி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஃபைனான்சியர் அழகப்பன் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகை கெளதமியின் சென்னை பாலவாக்கம், ஸ்ரீபெரும்புதூர், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிலங்களை அழகப்பன் என்பவர் விற்பனை மோசடி செய்து விட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கெளதமி புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அழகப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதனை எதிர்த்து, அறிவுரை குழுமம் நீதிபதிகளிடம் முறையிட்டதன் அடிப்படையில், அழகப்பன் மீதான குண்டர் சட்டத்தை நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர். பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய நடிகை கவுதமி, தற்போது அதிமுகவில் இணைந்து, அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1.81 கோடி பறிமுதல்: சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் (ஏப்.4) வாகன சோதனையில் ஈடுபட்டபோது. அவ்வழியே வந்த TN 09 BK 7779 வாகனத்தை மறித்து வாகன சோதனை செய்தனர். இதில் 1 கோடியே 81 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.
பணத்தை எடுத்து வந்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கிஷ்ணமூர்த்தி, சிவகுமார் மற்றும் ஒட்டுநர் ஷேக்கலாம் என தெரியவந்த நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் பணம் தொடர்பான உரிய ஆவனங்களை கேட்டு உள்ளனார். அவர்களிடம் உரிய ஆவனங்கள் இல்லை என்பதால் உடனே வருமான வரித்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பணத்தை வருமான வரித்துறை கருவூலத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
தனியார் விமான விமானியிடம் ரூ.2.11 லட்சம் மோசடி: சென்னை ஆலந்தூர் கண்ணன் காலனியில் வசித்து வருபவர் மனோ ரஞ்சித். இவர் தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசிய மர்ம நபர் மனோ ரஞ்சித்திற்கு கிரெடிட் கார்டுகள் வந்திருப்பதாக கூறியுள்ளார். அதற்கு மனோ ரஞ்சித், தனக்கு எதுவும் பார்சல் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தொலைபேசியில் பேசிய நபர் வேறு ஒரு நபரை அறிமுகப்படுத்திய நிலையில், அந்த நபர் தான் மும்பை சைபர் கிரைம் போலீசில் பணிபுரிந்து வரும் விக்ரம் என்றும், சட்டவிரோதமாக கிரெடிட் கார்டு பெற்ற பிரச்சினை தீர்க்க வங்கி கணக்கு மூலம் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 653 பணம் அனுப்பும்படி மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன விமானி மனோரஞ்சித், தனது வங்கி கணக்கில் இருந்து மர்மநபர் கூறிய தொகையை அனுப்பியுள்ளார்.
அதன் பிறகு தொலைபேசி மூலம் பேசிய நபர்கள் போலியானவர்கள் என தெரிய வந்தது. இது தொடர்பாக பரங்கிமலை காவல் நிலையத்தில் மனோ ரஞ்சித் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.
மெரினாவில் நண்பரின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு திரும்பிய போது நடந்த சோகம்: சென்னை பாரிமுனை, ராஜாஜி சாலை, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில், மெரினாவிலிருந்து பாரிமுனை நோக்கி செல்லும் மார்க்கத்தில் நேற்று (ஏப்.5) இரவு 10.30 மணியளவில் அதிவேகமாக சென்ற இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியது. இதில் ஒரு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு இளைஞர்கள் நிலை தடுமாறி அருகில் இருந்த சென்டர் மீடியனில் மோதியதில், படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடலையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்கள் கொருக்குப்பேட்டை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த அபிஷேக் (வயது 18) மற்றும் விவேக் (19) என்பது தெரிய வந்தது. அபிஷேக் எலக்டிரிசியனாகவும், விவேக் தனியார் கல்லூரியிலும் பயின்று வந்ததும் தெரியவந்தது.
நண்பர்களான இருவரும் நேற்றிரவு தங்களது நண்பரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மெரினா சென்று கேக் வெட்டி விட்டு திரும்பிய போது அதிவேகமாக வந்ததினால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தை நேரில் பார்த்த சிங்காரவேலன் என்பவர், 4க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் ஒருவரையொருவர் முந்தி செல்ல ரேஸில் ஈடுபட்டதாகவும், அப்போது ஒரு இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆர்.பி.ஐ சுரங்கப்பாதையில் தொடர்ச்சியாக பல விபத்துகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்த விபத்து தொடர்பாக பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆண் நண்பர்களை கட்டிப்போட்டு கத்தி முனையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 3 வாலிபர்கள் போக்சோவில் கைது! - Sexual Harassment At Dindigul