தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக கஞ்சா, போதப்பொருள்கள் ஆகியவை தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வருகிறது. கடத்தலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கியூ பிரிவு போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் 'சாரஸ்' என்ற அதிநவீன போதைப்பொருள் கடத்தப்படுவதாக கியூ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையில், உதவி ஆய்வாளர் ஜீவமணி, தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் மற்றும் தலைமை காவலர்கள் இருதயராஜ், பழனி முருகன், உட்பட தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு இருந்த வேனில் இருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 76 பண்டல்களில் 60 கிலோ சாரஸ் (Charas) (கஞ்சா செடியின் பிசிலிருந்து தயாரிக்கப்படும் கஞ்சா) என்ற போதைப்பொருளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி சவேரியார் புரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அமல்ராஜ்,தெர்மல் நகர் பகுதியைச் சேர்ந்த நிஷாந்த், தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்த விக்டர் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கஞ்சாவை உருக்கி சாரஸ் ஆக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளையும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் வைத்து (கியூ பிரிவு) போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாரஸ் (Charas) கஞ்சா செடியின் சர்வதேச மதிப்பு 29 கோடி ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும், அண்மையில், தூத்துக்குடியில் 24 கோடி மதிப்புள்ள சுமார் 8 கிலோ எடை கொண்ட மெத்தபேட்டமென் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 29 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி இந்த போதை பொருள் மிகவும் சக்தி வாய்ந்த போதை பொருள் எனவும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் பழனியில் கைது!