சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த கவலை தருகிறது.
இங்கு புவி வெப்பமயமாதல் என்றால், என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. பருவமழை என்பது இனிமேல் இருக்காது மழை, கனமழை, புயல் மழை என்று தான் இருக்கும் இதை எதிர்கொள்ள நாம் தயாராக இல்லை என்றால் இப்படி புலம்பிக் கொண்டே தான் இருக்க வேண்டும். வரும் காலங்களில் இது போன்ற பேரிடர்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
அரசு பணியில் இருக்கும் போது உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம், ஆசிரியை குத்தி கொலை செய்யப்பட்டதற்கு ரூ.5 லட்சம் நிவாரணம், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம். எனவே, இப்போது மதிப்பு மிக்க மரணம் கள்ளச்சாராயம் குடித்து இறப்பது தான். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது என்னையும் அழைத்தார்கள், ஆனால் திமுக என்னை அழைக்க மாட்டார்கள். இவர்களை பொருத்தவரையில் சமத்துவம் சமூகநீதி என்பதெல்லாம் வெறும் பேச்சுதான்.
அதானி, தமிழ் நாட்டிற்கு வரும் பொழுது யாரை பார்க்க வந்தார் என கேட்டால் எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர் ஒரு ஆளில்லை அவருக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு வேலை இல்லை என முதலமைச்சர் பதில் கூறுகிறீர்கள் இது ஏற்கதக்கதில்லை.
என்னை சங்கி எனக் கூறியதால் செருப்பை கழட்டி கட்டினேன்; அடிப்பேன் என்றேன். சங்கி என்றால் நண்பன் என புராண காலங்களில் இருந்தே பொருள் உள்ளது. ஆனால் திராவிடம் என்ற சொல்லுக்கு எப்படி பார்த்தாலும் திருடன் என்றுதான் பொருள் வரும். மத்திய அரசின் தலைவர்களை சந்திப்பவர்கள் எல்லாம் சங்கியா?
இதையும் படிங்க: ஐந்து மாதம் கூட தாங்கல! மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம் - பொதுப்பணித்துறை விளக்கம்!
அப்படி என்றால் எந்த மாநிலாத்தின் முதலமைச்சர்களும், ஸ்டாலினைப் போல மோடியை அவ்வப்போது சந்திப்பதில்லை. அனைத்து மாநில முதலமைச்சர்கள் மீதும் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டு முதலமைச்சர் மீது மட்டும் ஏன் மேற்கொள்ளப்படவில்லை,” என்றார்.