சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் வரும் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் தனித்து போட்டியிட உள்ள நிலையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மார்ச் 27) வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், “காங்கிரசும், பாஜகவும் வெவ்வேறல்ல. இரண்டிற்கும் இடையே கட்சி வேற்றுமை இருக்கிறதே ஒழிய, கோட்பாட்டு வேற்றுமை இல்லை. தொகுதி மேம்பாட்டு நிதியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீணடிக்கிறார்கள்.
வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக வருவதை நாம் தமிழர் கட்சி எதிர்க்கவில்லை, ஆனால் வாக்குரிமை பெற்று தமிழ்நாட்டிற்குள் அரசியலைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெறுவதை நாம் தமிழர் கட்சி எதிர்க்கிறது. அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் உள்பட அனைவருக்கும் தரமான கல்வியையும், மருத்துவத்தையும் அரசு வழங்க வேண்டும்.
கருணாநிதிக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் காவேரி மருத்துவமனை கொண்டு செல்கின்றனர், அரசு மருத்துவமனையில் இல்லாத கட்டமைப்பு தனியார் மருத்துவமனையில் உள்ளதா? அரசு கொடுக்க முடியாததை தனிப்பெரும் முதலாளி எப்படி கொடுக்க முடியும்? அப்படிப்பட்ட அரசு எதற்கு?
நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வினை எழுதி வரும் மாணவர்களுக்கு யார் பாடம் எடுப்பது, நீட் தேர்வினை எழுதாத ஆசிரியர்கள் தானே. நீட் தேர்வு எழுத வேண்டும் என கூறுவது போல் அரசியல்வாதிகளுக்கும் தேர்வு வைப்போம். மோடி, ஸ்டாலினை தேர்வு எழுதச் சொல்லுங்கள், எந்த தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள் என்று பார்க்கலாம். யார் அதிக மதிப்பெண் வாங்குகிறார்களோ அவர்கள் பிரதமர், முதலமைச்சர், தோற்றவர் சட்டமன்ற உறுப்பினர் என்று சொல்லலாம்.
பிரதமர் மோடிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரிடம் வைத்தியம் பார்ப்பார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவரிடம் தான் பார்ப்பேன் என்று சொல்வாரா? அதே பேராசிரியர், அதே பாடத்திட்டம், நீட் தேர்வு எழுதிவிட்டால் தரமான மருத்துவர் வந்துவிடுவார் என்று சொல்கிறீர்கள். அமெரிக்காவில் உள்ள புரோமெட்ரிக் (prometric) நிறுவனம் தான் நீட் தேர்வை நடத்துகிறது, ஒரு தேர்வைக் கூட உன்னால் நடத்த முடியவில்லை, அமெரிக்காகாரன் நடத்துகிறான், நீ எப்படி அரசியல் நடத்துவாய்” என கேள்வி எழுப்பினாா்.
மேலும் பேசிய அவர், “எந்த மொழியும் கற்கலாம், ஆனால் நாங்கள் வாழ்வதற்கு, எங்கள் மொழி தமிழ் கற்க வேண்டும். எனது குழந்தைகள் 2 பேரும் ஆங்கில வழிப் பள்ளியில் தான் படிக்கின்றனர், நான் அவமானப்படுகிறேன், அவர்களுக்கு தமிழ் படிக்க பள்ளிக்கூடம் இல்லை, நாங்கள் வீட்டில் பேசிப் பேசி தமிழ் கற்பிக்கிறோம்.
ஒரு நாட்டின் மருத்துவர்களுக்கான தேவை அதிகரிக்கிறது என்றால், நாடு நோயுற்ற சமூகமாக உள்ளது என்று அர்த்தம். காவல்துறை தேவை அதிகரிக்கிறது என்றால், குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கிறது என்று அர்த்தம். எந்த நாட்டில் ஆசிரியர்களுக்கு அதிக மதிப்பு வருகிறதோ, அது அறிவார்ந்த சமூகமாக இருக்கும். நோயற்ற சமூகத்தை உருவாக்குவதே மருத்துவரின் வேலை.
அரசியலை கற்பிக்காதது கல்வியே இல்லை, அரசியலே இல்லாத கல்வியே இல்லை, அரசியல் என்ற எண்ணமே இல்லாதவன் மனிதனாகவே இருக்க முடியாது. சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகிறது, எத்தனை பிரதமர்கள், முதல்வர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களாக இருந்தனர், பிறகு என்ன சிறுபான்மை மக்களுக்கான அரசு.
யார் பாஸ்போர்ட் வைத்து பார்த்தாலும் சிட்டிசன் ஆப் இந்தியா தான், பிறகு என்ன சிறுபான்மை பெரும்பான்மை என கூற வேண்டும்” என பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், கன்னியாகுமரியில் இருந்து நாளை தேர்தல் பரப்புரை தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.