சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் மிகப்பெரிய துயரம். அதில் நாம் பங்கேற்கிறோம். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஓடி வந்து பார்ப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான். உங்களுடைய தொகுதி என்பதால் நிவாரண நிதியை அறிவிக்கிறீர்கள்.
ஆனால், தூத்துக்குடியில் வெள்ளம் வந்த போது, எங்களை யாராவது வந்து பார்த்தீர்களா? எங்கள் ஓட்டு வேண்டும். எங்களது 10 சீட்டு வேண்டும். ஆனால், எங்களது உயிரைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை. இந்தியா எங்களை இந்தியனாக ஏற்கிறதா?
வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களினுடைய 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 03.08.2024
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) August 3, 2024
காலை 11 மணியளவில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்திய போது,… pic.twitter.com/uBwUHYJFXW
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களை ஒவ்வொருவராகச் சென்று பார்த்தீர்கள். ஆனால் மீனவர்களை சென்று யாராவது பார்த்தீர்களா? வடமாநிலத்தில் ஒரு மீனவன் கொல்லப்பட்டதும் ராணுவத்தை குவித்து போர் பதற்ற சூழல் அளவுக்கு பாதுகாப்பு கொடுத்தீர்கள். ஆனால், இங்கு நூற்றுக்கணக்கான மீனவர்கள் கொல்லப்பட்டும் யாரும் கண்டுகொள்வதில்லை. அவ்வளவு தான் எங்களது உயிருக்கு மதிப்பு.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கங்காரு குட்டியைப் போல் தன் வயிற்றில் ஸ்டாலினை சுமந்து வந்தார். தற்போது ஸ்டாலின் தன் மகனை சுமந்து வந்து இறக்கிவிடப் போகிறார். நீங்கள் எங்களைப் போல் தானாக உருவான காட்டு மரமா? நீங்கள் உருவாக்கப்படுகிறீர்கள். நாங்கள் உருவாகி வருகிறோம்.
எந்த தகுதியின் அடிப்படையில் உங்களுக்கு நீங்களே முடி சூடி கொள்கிறீர்கள்? ரெட் பிளிக்ஸ் வலையொளியை மூடுவது நியாயமல்ல, அரசுக்கு ஆதரவாக பேசும் வலையொளிக்கு ஆதரவாக செயல்படுவது நியாயமா? அரசை எதிர்த்து வீடியோ பதிவிட்டால் குண்டர் சட்டம் போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறும் கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்காது என அமைச்சர் ரகுபதி கூறுவது பொறுப்பற்றத்தனத்தை காட்டுகிறது. 99 சதவீத குற்றங்கள் போதையாலேயே நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நடக்கும் கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்காது எனக் கூறுவதற்கு அமைச்சர் தேவையா? அரசு தேவையா?
தமிழ்நாட்டில் இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவது தேவையா? அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கலாம். ஆனால், அதற்காக விளையாட்டாக இருக்கக் கூடாது. கார் ரேஸ் நடத்தினால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடுமா? எது எந்த நேரத்தில் செய்வதென்றே தெரியவில்லை.
எதிர்கட்சிகளோடு கூட்டணி குறித்த கேள்விக்கு, எந்த காலத்திலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமே இல்லை. எப்போதும் தனி கட்சியாகத் தான் போட்டியிடுவேன். காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணையைக் காணவில்லை என்ற செய்தியைக் கேட்டதும், வடிவேலு கிணற்றைக் காணவில்லை எனக் கூறும் காமெடி தான் ஞாபகத்திற்கு வந்தது" எனக் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “இலங்கை அணி தோற்றதால் இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு” - ஜெயக்குமார் பேச்சு! - Jayakumar about Fishermen arrest