ஈரோடு/திருப்பூர்: ஈரோடு நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய சீமான், “இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு இந்தி பேசும் மாநிலமாக மாறும். அதை தடுக்க நாம் தமிழர் கட்சிக்கு அதிகாரத்தைக் கொடுங்கள்.
நச்சாக மாறிய பிறகு எப்படி வாழ முடியும்? 5 ஆண்டு போதும் பூமியின் சொர்க்கமாக தமிழ்நாட்டினை மாற்றுவோம். 10 ஆண்டுகள் ஆண்டும் நாட்டை பிச்சைக்காரன் நாடாக மட்டுமே மோடி மாற்றியுள்ளார். மக்கள் மத்தியில் எவ்வளவு திட்டம் கொண்டு வந்தேன் என்று மோடி செய்தியாளரைச் சந்திப்பாரா? நிலத்தின் நீர் நச்சாக மாற ஆலைகள் தான் காரணம். நீர், காற்று, உணவு நச்சாக மாறிய பிறகு எப்படி வாழ முடியும்? 3 வயது குழந்தைக்கு எப்படி புற்றுநோய் வந்தது?
படித்தால் வேலை இருக்கிறதா? 100 மரணத்தில் 90 மரணம் புற்றுநோயாக உள்ளது. மண்ணை உயிராக நேசிக்கும் ஒருவன் ஆட்சிக்கு வரமால் இதனை சரி செய்ய முடியாது. 5 ஆயிரம் ஏக்கரில் விமான நிலையம் அமைப்பதற்குப் பதிலாக ஏரி வெட்ட வேண்டும். வேளாண்மை ஒரு தொழில் அல்ல, பண்பாடு என்று உணர வேண்டும். படிக்க கல்வி இருக்கின்றதா? படித்தால் வேலை இருக்கிறதா? எல்லாம் தனியார் தொழிற்சாலைகளுக்கு தாரை வார்க்கப்பட்டது.
இந்திய நாட்டை மறந்துவிட வேண்டும்: தேங்காய்க்கு உரிய விலைக்கு இந்த ஆட்சியாளர்களால் விலை நிர்ணயம் செய்யவில்லை. சாதி, மதம், கடவுள் பற்றி சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான். மக்களைப் பற்றி சிந்திப்பவனுக்கு சாதி, மதத்தைப் பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. பவானி வாய்க்காலில் இத்தனை ஆண்டுகளாக தண்ணீர் ஓடிக்கொண்டே இருந்த நிலையில், எதற்காக சிமெண்ட் போட்டு பூச வேண்டும்? இதற்கு மாற்றாக கரையோரம் பனைமரம் வைத்தால் கரை அரிப்பு எளிதாக தடுத்துக் கொள்ள முடியும்.
தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத காங்கிரஸ் கட்சிக்கு எதற்காக ஓட்டு போடுகிறீர்கள்? தமிழ்நாட்டில் வேளாண்மை செய்ய விதை இல்லை, அதையெல்லாம் மோடி விற்றுவிட்டார். ஜி.எஸ்.டி, நீட் போன்ற திட்டம் கொண்டு வந்தது காங்கிரஸ். திமுக அதற்கு செயல் வடிவம் கொடுத்தது. பாஜக கட்சிக்கு இன்னொரு முறை வாய்ப்பு கொடுத்தால், இந்திய நாட்டை மறந்து விட வேண்டும். 90 சதவீத நாடு ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டது.
என்னால் கூட்டணி வைக்க முடியும்: பாஜகவிற்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் அதானி, அம்பானி ஆகிய இருவரிடமும் தான் நாடு இருக்கும். முதலமைச்சருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டால் கூட தனியார் மருத்துவமனைக்குச் செல்கிறார். அரசு ஏன் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கவில்லை? பிரதமர் என்பது இந்திய நாட்டின் புரோக்கர், முதலமைச்சர் என்பவர் ஆல் இந்தியா புரோக்கர். நூல் விலை, மின் கட்டணம் உயர்வு போன்றவை மூலம் நெசவாளர்கள் தொழில் செய்ய முடியாமல் நலிவடைந்து வருகிறார்கள்.
வட இந்தியர்கள் இப்போது கூலி. இன்னும் 5 ஆண்டுகளில் அவர்களுக்கு நீ தொழிலாளி. எல்லா உயர்ந்த அமைச்சர் இலாகாவும் தெலுங்கு சமூகத்தினைச் சேர்ந்த அமைச்சரிடம் உள்ளது. சிதைந்து அழிந்து கொண்டு இருக்கும் தமிழ் மக்கள் போராடி தான் வாழ வேண்டும் என்று நிலை உள்ளது. இதை உணர்ந்து தான் களத்தில் நிற்கிறோம். என்னால் இந்த கட்சிகளோடு கூட்டணி வைக்க முடியும். ஏன் வைக்கவில்லை?
தமிழ் தேசிய ஆட்சி மலரும்: நான் பிரபாகரனை பார்த்து களத்திற்கு வந்தேன். ஆகையால், ஓட்டுக்கு ஒரு ரூபாய் கொடுக்காமல் 32 லட்சம் ஓட்டு வாங்கி உள்ளேன். என்னை உங்கள் உறவுகளில் ஒருவனாக பார்க்கிறார்கள். மாற்றம் என்பது சொல் அல்ல, செயல். இந்த நாட்டில் தமிழ் தேசிய ஆட்சி மலரும். சாதிய ஒடுக்குமுறை, இழிவு, தீண்டாமை, பாலியல் வன்கொடுமை ஏதும் இல்லாத தூய தமிழ் தேசியத்தை படைப்போம்.
இயற்கை வளத்தைக் காப்போம். திராவிட முன்னேற்றக் கழகம் தத்துவக் கோட்பாடு கிடையாது. திருடர்களின் முன்னேற்ற கழகம். அதேபோல, அதிமுக அனைத்து இந்திய அளவில் திருடர்கள் முன்னேற்றக் கழகம். எல்லாத்துக்கும் புதுமை தேடும் மக்கள் 75 வருடங்களாக ஒரே சின்னத்திற்கு வாக்கு போடும் நீங்கள், இந்த முறை மைக் சின்னத்திற்கு வாக்கு போடுங்கள். 5 ஆண்டு வாழ்க்கையை தீர்மானிக்க ஏன் மாற்றத்தை தேட மாட்டீர்கள்?
100 வாக்குகள் கூட இருக்காது: திமுகவை ஸ்டாலினும், அதிமுகவை எடப்பாடி பழனிசாமியும் கட்சி ஆரம்பத்து இருந்தால் எத்தனை வாக்கு வாங்கி இருப்பார்கள்? அண்ணாமலை தனியாக கட்சி ஆரம்பத்து இருந்தால் என்னவாயிருக்கும்? அவர் 100 வாக்குகள் கூட பெற்று இருக்கமாட்டார். அவர் வளர்த்த ஆட்டுக்குட்டி கூட ஓட்டு போட்டு இருக்காது” என்று பேசினார்.
மேலும், திருப்பூரில், திருப்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து சீமான் பேசினார். தனது பேச்சினை முடிப்பதற்கு இரண்டு நிமிடம் மட்டும் இருக்கும் நேரத்தில் மேடையில் பாட்டு பாடி அவர் வாக்கு சேகரித்தார்.
“கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்” என்ற வரியில் ஆரம்பித்து, உன்னால் முடியும் தம்பி தம்பி என்ற பாடலைப் பாடினார். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து “ஓட்டுப்போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத.. கண்ட கண்ட சின்னம் கண்டு கலங்கி நிக்காத.. உழைக்கும் மக்கள் சின்னம் இந்த ஒலிவாங்கி சின்னம்” என்று பாடி வாக்கு சேகரித்தார்.
இதையும் படிங்க: "மக்களை ஏமாற்றுவதில் வல்லவர் என்று ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம்" - திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு! - Lok Sabha Election 2024