தஞ்சாவூர்: ஆந்திராவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக தஞ்சை மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், தஞ்சாவூர் மாநகர எல்லையான கோடியம்மன் கோயில் பகுதியில் காவல்துறையினர் நேற்று (டிசம்பர் 17) வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் வந்த கார் ஒன்றை, போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தியதாகவும், அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதையடுத்து காவல்துறையினர் காரை முழுமையாக சோதனை மேற்கொண்டதாகவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போலீசாரின் இந்த சோதனையின்போது காரின் பின்புறத்தில் ரகசிய அறை அமைத்து அதில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, அந்த காரில் வந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பால்பாண்டி (40), ரவிக்குமார் (28), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீரப்பன் (26) ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாது, இரண்டு கிலோ பொட்டலங்களாக சுமார் 103 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் மற்றும் 3 செல்போன்களையும், இந்த கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுபோதையில் நடுரோட்டில் காரை நிறுத்தி உறக்கம்.. திருமுல்லைவாயலில் குடிமகன்கள் அட்ராசிட்டி!
இதன் தொடர்ச்சியாக கைதான மூவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா இலங்கைக்கு படகு மூலமாக புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி மூலம் கடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும் எனவும் தெரியவந்துள்ளது. மேலும், இது தொடர்பாக மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் கூறுகையில், "ஆந்திராவில் இருந்து கடல் வழியாக கஞ்சா இலங்கைக்கு கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலைவாணி, மருத்துவக் கல்லூரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் சந்திரா, துணை காவல் ஆய்வாளர் டேவிட் ஆகியோர் சேர்ந்து கோடியம்மன் கோயில் அருகில் நம்பர் பிளேட் இல்லாமல் வந்த சந்தேகத்திற்குரிய காரை சோதனையிட்டனர்.
அப்போது அந்த காரில் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தொடர்ச்சியாக இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது," என தெரிவித்துள்ளார்.