சென்னை: தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள அலுவலகத்தில் இன்று (பிப்.18) நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து அதன் பொதுச் செயலாளர் தாஸ் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது, "ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்ப்பில் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் எடுத்துக் கூறினோம். தமிழ்நாடு முதலமைச்சர் எங்கள் கோரிக்கைகளைப் பரிசீலித்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் சட்டமன்றத்தில் நாளை (பிப்19) அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
இந்த நிலையில் ஆசிரியர்களைப் பிரித்தாலும் வகையில் அரசாணை 243ஐ கொண்டு வந்துள்ளனர். இந்த அரசாணையை ஆசிரியர் சங்கங்களைக் கேட்காமல் கொண்டு வந்துள்ளனர். ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை மூடி மறைக்க புதிய பிரச்சினையாக இதனைக் கொண்டு வந்துள்ளனர். இந்த அரசாணை 243 கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாகக் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவர். ஒரு ஆசிரியர், ஈராசிரியர் பள்ளிகளில், அதாவது கிட்டத் தட்ட 2500 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டால் அந்த பள்ளிகள் 10 நாட்கள் மூடும் நிலைமை ஏற்படும்.
243ஐ அரசாணையில் திருத்தம் செய்யப் போவதாகக் கூறுகிறார்கள். நாங்கள் அந்த அரசாணையை முழுமையாக எதிர்க்கிறோம். அதனால் 243 அரசாணையை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பள்ளிகளில் இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆசிரியர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டிட்டோ ஜாக் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் எங்கள் சங்கத்தினர் பங்கேற்கிறோம். தமிழக அரசு, அரசாணை 243ஐ ரத்து செய்யவில்லை என்றால் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏற்காட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து: 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்; போக்குவரத்து பாதிப்பு!