தஞ்சாவூர் : பாடம் நடத்தாத நேரங்களில் ஆசிரியர்கள் ஓய்வெடுக்கும் அறைக்குச் சென்ற இளைஞர் ஒருவர், அங்கிருந்த 26 வயது ரமணி எனும் ஆசிரியையை கழுத்தில் குத்தி படுகாயத்தை ஏற்படுத்தியதால், பள்ளி வளாகம் அதிர்ச்சியில் உறைந்தது.
உடனடியாக அவரை மீட்ட சக ஆசிரியர்கள், அருகில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஆசிரியையை கத்தியால் தாக்கி கொலை செய்த மதன் எனும் இளைஞரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
திருமணம் செய்யாததால் ஆத்திரம் :
இந்த விசாரணையில் பல தகவல்களை மதன் காவல்துறையினரிடத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகளான ரமணி (26), மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார்.
இதற்கிடையில், சின்னமனை பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரது மகனான மதனுக்கு (30), பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்து, ரமணியைப் பெண் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் ரமணிக்கு, மதனை திருமணம் செய்வதில் விருப்பமில்லை என கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க |
அரசுப் பள்ளிக்குள் நடந்த கொலை :
இதனால் ஆத்திரமடைந்த மதன், இன்று (நவம்பர் 20) காலை வழக்கம்போல பள்ளியின் ஆசிரியர் அறையில் இருந்த ரமணியை பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அச்சமயம் ரமணி சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து ரமணி கழுத்தில் குத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதை தடுக்க முயற்சித்து, ரமணியின் கையிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளது வெளியான வீடியோ பதிவு வாயிலாக தெரியவந்துள்ளது. ரத்தம் சொட்ட அங்கேயே சரிந்து விழுந்த ரமணியை கண்டு, சக ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அவரை மீட்டு அருகில் இருக்கும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக கூடுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
முதன்மை கல்வி அலுவலருக்கு கடிதம் :
தற்காலிக தமிழ் ஆசிரியரான ரமணி கொலை தொடர்பான அறிக்கை கடிதம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "10-06-2024 முதல் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியராக ரமணி என்பவர் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை தமிழ் பாடம் போதித்து வந்தார். அவருக்கு முதல் பாடவேளையில் வகுப்பு கிடையாது என்பதால் அவர் ஆசிரியர்களுக்கான ஓய்வு அறையில் இருந்து வந்தார்."
"இன்று காலை 10:10 மணிளவில் ஆசிரியர்களுக்கான ஓய்வு அறையின் வரண்டா பகுதியில் சின்னமனையை சேர்ந்த மதன் என்பவர் ஆசிரியை ரமணியுடன் நின்று பேசி கொண்டிருந்தார். எதிர்பாரத விதமாக ஆசிரியர் ரமணியின் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயற்சி செய்தார்."
"அவரை இப்பள்ளியின் ஆசிரியர்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். ஆசிரியர் ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சை கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டார். இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது," என்று அந்த அறிக்கை கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
பள்ளிக்கல்வித்துறை இரங்கல்:
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) November 20, 2024
ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆசிரியர் ரமணி…
"அரசு துணை நிற்கும்" : தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தஞ்சாவூரில் வகுப்பறையில் ஆசிரியர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கூறும்போது, "இதுபோன்ற சம்பவம் பள்ளிக்குள் நடந்திருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியையின் மறைவு உள்ளபடியே வேதனைக்குள்ளான ஒன்று. கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்துக்கு அரசு என்றும் துணை நிற்கும். ஆசிரியர்கள் பணி பாதுகாப்புக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
ஆசிரியர் கொலை செய்யப்பட்ட பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு, மாணவர்கள் பயந்துவிடாமல் இருக்க, மனநலன் பாதிக்காத வகையில் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் அறிவிப்பு#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | pic.twitter.com/xfr5TGNJaI
— TN DIPR (@TNDIPRNEWS) November 20, 2024
முதலமைச்சர் இரங்கல்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (26) கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும். கிராமப்புறப் பகுதியில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட செல்வி ரமணி அவர்களின் உயிரிழப்பு பள்ளிக் கல்வித் துறைக்கும், சக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
செல்வி ரமணி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, செல்வி ரமணி அவர்களின் குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என தமது அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.