பெரம்பலூர்: பெற்றோருக்குத் தெரியாமல் இருசக்கர வாகனம் மூலம் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஆய்க்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் கோகுல் (13). திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வேங்கடத்துனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் நித்திஷ் (14). இவர்களது பெற்றோர், பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தில் தங்கி, கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
இந்நிலையில், பெற்றோருக்குத் தெரியாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, சிறுவர்கள் இருவரும் பெரம்பலூர் நோக்கி சென்றுள்ளனர். பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நெடுவாசல் பிரிவு பாதை என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சிறுவர்கள் சாலையைக் கடக்க முயன்றுள்ளனர்.
அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சிறுவர்கள் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சிறுவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இரு சிறுவர்களின் உடல்களைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.