சென்னை: சென்னையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு பயின்றுவரும் 16 வயது பள்ளி மாணவி ஒருவர், கடந்த 18ஆம் தேதி மாலை பள்ளி முடித்து வீடு சென்ற நிலையில், இயற்கை உபாதை கழிக்க திறந்தவெளி பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாணவியின் உறவினர்களான 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் 23 வயது இளைஞர் உள்ளிட்ட 3 பேர் மாணவியிடம் பேச்சு கொடுத்து தூக்கிச் சென்று காட்டுப் பகுதியில் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, வீடு திரும்பிய மாணவி அவரது தந்தையிடம் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மாணவியை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முறையாக மருத்துவப் பரிசோததனை நடைபெற்று ஆதாரங்கள் திரட்டப்பட்டது.
அதே வேளையில், உதவி ஆணையாளர் வெங்கடேசன், ஆய்வாளர் சார்லஸ், உதவி ஆய்வாளர் சுந்தர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்ட நபர்களைத் தேடிய நிலையில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று பேரும் தலைமறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இருந்தபோதிலும், தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர், 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் 23 வயது நபர் ஆகிய மூன்று பேரையும் கண்டுபிடித்து, அவர்களைக் கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, குற்றம் சுமத்தப்பட்ட 16 வயது சிறுவர்கள் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனை அடுத்து, சிறுவர்கள் இரண்டு பேரையும் செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளிக்கும், 23 வயது நபரை புழல் சிறைக்கும் அனுப்பிவைத்தனர்.