திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்த ரித்திகா, இவர் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜிடம் தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணம் மற்றும் மணுவை அளித்துள்ளார்.
அந்த மனுவில், "தான் அண்மையில் நடந்த வயநாடு நிலச்சரிவு காரணமாக அப்பகுதி மக்கள் தங்களது உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தான் இதுவரை உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
9ஆம் வகுப்பு மாணவியின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்வடையச் செய்துள்ளது. கடந்த மாதம் 30ஆம் தேதி, வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாட்டையே பெரும் சோகத்தில் தள்ளியது. இந்த நிலச்சரிவில் மீட்புக் குழுவினர், தன்னார்வாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர்.
மேலும், அரசியல் கட்சிகள், திரைப்பிரபலங்கள் என பலர் உதவித் தொகை வழங்கி வருகின்றனர். அதேபோல், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் தனக்கு வரும் வருமானத்தை நேரடியாக கேரளா மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு செலுத்தி வருவது மக்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு: ஆட்டோ சவாரி வருமானத்தை நிவாரண நிதியாக கொடுக்கும் சென்னை பெண் ஒட்டுநர்!