தஞ்சாவூர்: தொடர்ந்து 8 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சியைக் கொடுத்து வருகிறோம், சிறந்த ஆதரவுகள் வழங்கும் போது நாங்கள் மேலும் பல சாதனைகளைப் படைப்போம் என தஞ்சையில் 8வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி காண்பித்துள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
தஞ்சை மேம்பாலம் அருகே, பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இந்த ஆண்டு 5 மாணவிகள், 25 மாணவர்கள் உட்பட 30 பேர் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதினர்.
இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இப்பள்ளியிலிருந்து தேர்வெழுதிய 30 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியைக் காண்பித்துள்ளது. இப்பள்ளியில் படித்த தீபலக்ஷ்மி என்ற மாணவி 460 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், நவீன்குமார் என்ற மாணவர் 455 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், ராமச்சந்திரன் என்ற மாணவர் 447 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
மேலும், இப்பள்ளி தொடர்ந்து எட்டாவது ஆண்டாக, 100 சதவீதம் தேர்ச்சியைக் காண்பித்துள்ளதால், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பிற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பின்னர் இது குறித்துப் பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணிக்கராஜ், "தொடர்ந்து, 8 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சியைக் கொடுத்து வருகிறோம். இதற்கு உதவிய ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், விடுதி காப்பாளர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகிய அனைவருக்கும் நன்றி.
மேலும், இந்த வெற்றிக்கு காரணமான தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், அரசு சாரா அமைப்புகள் உள்ளிட்ட பலர் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர்.
இவ்வாறான ஆதரவுகள் வழங்கும் போது நாங்கள் மேலும் பல சாதனைகளைப் படைப்போம். எங்கள் பள்ளியில் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. பார்வை குறைபாடுடைய குழந்தைகள் இருந்தால், எங்களது அரசுப் பள்ளியில் சேர்க்கலாம்.
எங்கள் பள்ளியில் 11ஆம் வகுப்பில், பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு ஏற்றார்போல் 1 குரூப் மட்டும் உள்ளது. மாணவர்கள் மேலும் படித்து, வேலைகளுக்கு செல்வதற்கு ஏற்ற ஒரு குரூப்பாக உள்ளதால், இதனை வைத்துள்ளோம்" என கூறியுள்ளார்.