புதுக்கோட்டை: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் செய்ய இன்று மாலையே கடைசி எனவும், அதை மீறி பிரச்சாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ஜல்லிக்கட்டு ராஜேஷ்க்கு ஆதரவு தெரிவித்து, வேங்கைவயல் கிராமத்தில் சாட்டை துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதாவது, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்திய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், மனிதக்கழிவு கிடந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 31 நபரிடம் ரத்த மாதிரி எடுத்து, டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. தற்போது கடந்த 16 மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்தாலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாததைக் கண்டித்து, வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து, கிராமத்தில் பிளக்ஸ், பேனர்கள் வைத்திருந்தனர். மேலும் எந்த ஒரு அரசியல் கட்சியும் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்றும் தெரிவித்திருந்தனர். இச்சம்பவம் அரசியல் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து, தற்போதுவரை திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும் வேங்கைவயல் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்கச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை எந்த கட்சியும் பிரச்சாரம் மேற்கொள்ள கிராமத்திற்குள் நுழையாத நிலையில், நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ்க்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியின் மாநில நிர்வாகி சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் வாக்கு சேகரிக்க சென்றனர்.
அப்போது வேங்கைவயல் கிராமத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று தான் நாங்கள் வாக்கு சேகரிக்கிறோம் எனவும், வாக்கு சேகரிப்பு என்பது எங்களுடைய உரிமை எனவும், அனுமதி மறுக்கப்பட்டால் அதற்கான கடிதத்தை வழங்குமாறும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் வேங்கைவயல் பகுதியில் வாக்கு சேரிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது பிரச்சாரத்தில் பேசிய சாட்டை துரைமுருகன், "நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துவது தான் உங்களது ஒட்டுமொத்த எதிர்ப்பை காட்டுவதற்கான வழி. சமூக நீதிக்கு ஆதரவாக, சகோதரத்துவத்திற்கு ஆதரவாக, ஜனநாயகத்திற்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதை காட்டுவதற்கு ஒரே தீர்வு நாம் தமிழர் கட்சி. தேர்தல் புறக்கணிப்பு என்பது நமது உரிமையைப் பறிகொடுப்பதற்குச் சமம்.
நமது இந்தியாவில் நமக்கு அளித்திருக்கக்கூடிய மிகப்பெரிய உரிமை வாக்களிப்பது. அதை ஒருபோதும் இழக்கக்கூடாது. இதுவரை நாம் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ நமது பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை. இந்த வேங்கைவயல் விவகாரம் டில்லி நாடாளுமன்றத்தில் ஒழிக்க வேண்டும் என்றால், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சியை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.
கடந்த 15 மாதங்களாக வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான காவல்துறை தமிழ்நாட்டில் இருக்கும் போதும், ஏன் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை?. மேலும், இந்த வேங்கைவயல் விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை. இதான் உங்கள் சமூக நீதியா? இதுதான் உங்கள் சட்டம் ஒழுங்கா?.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட இது குறித்து பேசினார். ஆனால் தமிழக முதலமைச்சரோ, அமைச்சர்களோ இதுகுறித்து பேச மறுக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் பதிவின் அடிப்படையில் ஒரு மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுகின்றனர். வேங்கைவயல் வழக்கிற்கு ஒரு வருடத்திற்கு மேல் கால அவகாசம் தேவைப்படுகிறதா?.
திட்டமிட்டு யாரையோ காப்பாற்ற, எதையோ காப்பாற்ற திமுக சதி செய்கிறது. எனவே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசி, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, இந்த விவகாரத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.