திருநெல்வேலி: ‘அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வரும் சசிகலா, நெல்லை மாவட்டத்தில் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று, நெல்லை மாநகர் பகுதிகளில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து தனது பயணத்தை தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே மழையில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வழியில் ஜெயலலிதா ஆட்சி நடத்தி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து கொடுத்தார். ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து நலன்களையும் திட்டங்களாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்காக செய்து கொடுத்திருந்தார்.
ஆனால், திமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செய்யப்படவில்லை. ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் என எதுவும் தற்போது கொடுக்கப்படவில்லை. ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசி எடை குறைவாக வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அதை புரிந்து கொண்டே அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பதற்காக நான் மக்களுக்காக இருக்கிறேன் என்பதை தினம் தினம் திமுகவிற்கு ஞாபகப்படுத்தி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்வதற்கு ஆட்சிக்கு வருவதாக சொல்லிவிட்டு எதுவுமே செய்யவில்லை. இன்னும் எவ்வளவு நாட்கள் இவர்கள் இருக்கப் போகிறார்கள்? திமுக ஆட்சிக்கு வந்து 40 மாதங்கள் கடந்து விட்டது. இன்னும் 20 மாத காலம் தான் இருக்கிறது.
அதில் 15 மாதங்கள் மட்டுமே அவர்கள் மக்களுக்கான பணிகளைச் செய்ய முடியும். மீதி உள்ள காலங்களில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிடும். நெல்லை மாநகராட்சியில் எந்த பணிகளும் நடக்கவில்லை. கவுன்சிலர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார்கள்.
பாதாளச் சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. திமுக அரசைப் போலவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளும் செயல்படாமல் இருக்கிறது. மாநகராட்சி கவுன்சிலர்கள் கடைக்காரர்களிடம் பணம் கேட்டு ஏழை எளிய மக்களை கசக்கி பிழிந்து வருகிறார்கள். திமுக ஆட்சி அமைந்த பின்னர் மூன்று முறை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அவர்களை திருத்த வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், எதை எடுத்தாலும் ஊழல் தான் இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. திருநெல்வேலியில் 240 கொலைகள் நடந்துள்ளது. பெண்கள் வெளியவே செல்ல முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது.
திமுக இதனை திருத்திக் கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் இந்த ஆட்சியை நல்ல வழிக்கு கொண்டு செல்லும் வேளையில் இறங்க வேண்டும். இவ்வளவு நாள் இந்த ஆட்சியில் சும்மா இருந்து உள்ளீர்கள். நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எங்கெங்கு, என்னென்ன தப்பு நடக்கிறது என எடுத்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். பொதுமக்கள் கஷ்டத்தில் இருக்கும்போது அரசு உதவி செய்ய வேண்டும். ஆனால், எந்த உதவியும் செய்யாமல் பொதுமக்களிடமிருந்து பணத்தை பறிக்கும் வேலையை அரசு செய்து வருகிறது. அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "எடப்பாடி பழனிசாமியை தொண்டர்களே விரட்டும் காலம் விரைவில் வரும்" - டிடிவி தினகரன் சாடல்!