சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தொண்டர்களைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவில் 3வது பெரிய இயக்கமாக இருந்த அதிமுக ஒரு சில சுயநலவாதிகளால் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் அவர்களிடம் கற்று கொண்டேன்.
எனக்கு இந்த ஊரு, இந்த சாதி என்பது தெரியாது. மறைந்த முன்னாள் முதல்மைச்சர் ஜெயலலிதா அவர்களும் சாதி பார்ப்பவர் இல்லை. அப்படி பார்த்திருந்தால் அவரின் தோழியாக நான் இருந்திருக்க முடியாது. ஆனால் தற்போது அதிமுகவில் சாதி அரசியல் செய்கிறார்கள். அவர்கள் தனியாக சாதி இயக்கத்தை உருவாக்கி சென்றால் யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் அதிமுகவிலிருந்து செய்வதை ஏற்க முடியாது.
நான் சாதி என நினைத்திருந்தால் அவருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பேனா? அப்படி நான் நினைக்கவில்லை. திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது. தொண்டர்கள் உழைப்பார்கள் பதவி வாரிசுக்கு போகும். அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. தொண்டரும், தலைவர் ஆகலாம். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. தானும் கெட்டு கட்சியையும் கெடுக்கக் கூடாது.
2026ஆம் ஆண்டு தனிப் பெரும்பான்மை சக்தியுடன் அம்மாவின் ஆட்சி அமையும். தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளேன். திமுகவின் பிடியில் இருந்து தமிழக மக்களை காக்க நாம் வந்தே ஆக வேண்டும். அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்து இருப்பது தவறானது. அதிமுக முடிந்துவிட்டது என நினைப்பவர்களுக்கு என்னுடைய என்டிரி ஆரம்பம் ஆகிவிட்டது.
தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது. திமுக ஆட்சியில் மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளது. புதிய பேருந்துகள் வாங்கமல் உள்ளதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கோடநாடு வழக்கை தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுகிறார்கள். கோடநாடு விசாரணையை ஏன் இவ்வளவு பொறுமையாக நடத்த வேண்டும். திமுக அரசால் கோடநாடு விசாரணையை கூட வேகமாக நடத்த முடியவில்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் ஒத்திவைப்பு! என்ன காரணம்? - PM Modi TN Visit Postponed