சென்னை: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாயுள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மழை நீர் சற்று வடிந்து இருப்பதால், புளியந்தோப்பு பட்டாளம், ஆஞ்சநேயர் கோவில், சிவராவ் சாலை சந்திப்பு, கே.எம்.கார்டன், தட்டான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை சசிகலா வழங்கினார்.
" எதுவும் மாற போறதில்ல"#VKSasikala #ADMK #TamilnaduNews #DMK #CMMKStalin #ETVBharatTamilnadu pic.twitter.com/WyB5dtz25J
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) October 17, 2024
பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சசிகலா, “தற்போது நடைபெற்று வரக்கூடிய அரசு என்பது மக்களுக்கான அரசா என்ற கேள்வியை தான் எழுப்பியுள்ளது. அவர்களுடைய ஆட்சி முறை அப்படி இருக்கிறது. இப்பொழுது இருக்கக்கூடிய அரசு அவர்களுடைய கட்சி சார்ந்த தலைவர்களின் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக தான் செயல்பட்டு வருகிறது. தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் மக்களுக்கான நன்மைகளை செய்திருக்கிறோம் என்பதை கூறுகிறார்கள் தவிர, கள நிலவரம் அப்படி அல்ல.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு முறை மழை பெய்து இருக்கிறது. அந்த மழைக் காலங்களில் சென்னை மழை வெள்ளத்தில் எப்படி தத்தளித்தது என்பதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். மக்களும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நிலையில் அவர்கள் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது. மழைக்காலங்களில் செய்ய வேண்டிய பணிகளை திமுக அரசு செய்ய தவறியுள்ளது” என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: பர்த் டே பேபி அதிமுக: வைராக்கிய எடப்பாடி! "இனி திருந்தமாட்டார்" என சீறும் ஓ.பி.எஸ். அணி
தொடர்ந்து பேசிய அவர், “சென்னையில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பெரிய கால்வாய்களையும், முகத்துவாரங்களையும் முறையாக தூர்வாரி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இந்த மழையில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்காது. ஆனால், திமுக அரசு அதை செய்ய தவறிவிட்டது.
சும்மா டீக்கடையில் போய் முதலமைச்சர் டீ குடிப்பதாலேயோ, மைக் புடிச்சிட்டு பேசுறதாலேயோ எதுவும் மாற போறது இல்லை. இது தான் திமுகவின் உண்மை நிலை. பல்லாயிரம் கோடி ரூபாய் சென்னையினுடைய வளர்ச்சிக்காக செலவு செய்து உள்ளோம் என அரசு சொல்கிறது. ஆனால், அப்படி செலவு செய்திருந்தால் ஒரு நாள் மழைக்கு எப்படி சென்னை இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கும். ஏழை மக்களுக்கோ அல்லது நடுத்தர மக்களுக்கு உதவி செய்யக்கூடிய அரசாக திமுக அரசு செயல்படவில்லை.
98 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் முடிவு பெற்றுள்ளதாக அமைச்சர் கூறினார். அப்படி 98 சதவீதம் பணிகள் முடிந்திருந்தால் எப்படி குடியிருப்பு பகுதி மட்டும் அல்லாது சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியிருக்கும். அமைச்சர்கள் பல நேரங்களில் பொய் சொல்ல தயங்குவதில்லை. சரளமாக அவர்கள் பொய் சொல்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள். வரக்கூடிய தேர்தலில் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என அவர்களுக்கு தெரியும். திமுகவின் குறிக்கோள் கலைஞர் நூற்றாண்டு விழா என கல்வெட்டுகளை பொறிக்க வேண்டும் என்பது தான்” எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்