சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா இன்று மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவும் ஏழை இளைய மக்களுக்காகவே வாழ்ந்து சென்றவர்கள். அவர் மறைந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள அனைவரது வீடுகளிலும், மனங்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இரு தலைவர்களும் ஆட்சிக்கு வந்து ஏழை மக்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவர்கள். அவர்களது வழியில் வரும் 2026 தேர்தலில் அம்மாவின் ஆட்சியை கொண்டுவந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொடுப்போம்.
திமுக ஒரு தீய சக்தி என எங்களது இரு தலைவர்களும் சொல்லி இருக்கிறார்கள். மக்களுக்கு சொல்லியதை செய்யாததால் தான் திமுகவை தீய சக்தியை என சொன்னார்கள். இப்போதும் அது தீய சக்திதான். மக்களுக்காக இந்த அரசாங்கம் எதுவும் செய்ததில்லை. வாயால் பேசிக்கொள்கிறார்களே தவிர எந்த வித வேலையும் நடக்கவில்லை.
நீர்நிலைகளை சரி செய்யவில்லை. சரி செய்வதற்காக டெண்டர்கள் விடப்படுகிறது. அதில் பாதி பேர் டெண்டர் செய்ததாக கணக்கை காட்டி இருக்கிறார்கள். பலர் போட்டி மனப்பான்மையோடு டெண்டர் எடுத்து வேலையை செய்யாமல் இருந்திருக்கிறார்கள். இந்த மழை வெள்ளத்தில் அத்தியாவசிய பொருட்கள் என அனைத்தையும் நீரில் தொலைத்த மக்கள் நிற்கதியாக நிற்கிறார்கள். இந்த நான்காண்டு காலத்தில் மக்கள் அனைத்தையும் புரிந்து கொண்டார்கள். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழக மக்களுக்காக அவர்களுடைய ஆட்சியையே நாங்கள் அமைப்போம்” என்றார்.
மேலும் பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பேசிய அவர், “குடிநீரில் கழிவு நீர் கலந்து மூவர் உயிர் இழந்திருக்கிறார்கள். இந்த ஆட்சியில் சென்னையில் குடிநீர் வழங்குவதற்கு என மெட்ரோ என்கிற துறை அலுவலகமும் இருக்கிறது. அதனால் கழிவு நீரில் குடிநீரில் கலப்பது தெரிந்திருக்கும், உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களில் மெட்ரோ குடிநீரை நிறுத்திவிட்டு, லாரிகள் மூலமாக குடிநீரை விநியோகம் செய்து இருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை.
இதையும் படிங்க: 'அதிமுகவுக்கு முடிவுரை எழுதுவார் ஈபிஎஸ்'... ஓபிஎஸ் - டிடிவி தனித்தனியே சூளுரை..!
விழுப்புரத்தில் இருளர் காலணியில் ஏராளமானவர்கள் அவர்களது சான்றிதழ்களை மழை வெள்ளத்தில் இழந்து இருக்கிறார்கள். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் தனி அதிகாரிகளை நியமித்து அவர்களுக்கான சான்றிதழ்களை புதுப்பித்து தர வேண்டும்” என்றார். இதையடுத்து நீங்கள் மீண்டும் தேர்தல் அரசியலுக்கு வருகிறீர்களா என்கிற கேள்விக்கு, “ஆட்சியே அம்மாவின் ஆட்சிதான். அதை கொண்டு வரப்போவதும் நான் தான்” என்றார்.
இதையடுத்து, ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா உயிரோடு இருந்து கட்சியை வழிநடத்தி இருந்தால் அதிமுக இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு இருக்காது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைைய வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் எடப்பாடி ஒத்துழைப்பை தர மறுக்கிறார்.
அனைவரும் சேர்வதற்கு, முதலில் எடப்பாடி தவிர மீதமிருக்கும் அணிகள் இணைய வேண்டும். இந்த இயக்கம் ஒன்றிணையவில்லை என்றால் இந்த இயக்கம் பாதாள கிணறுக்கு போய்விடும். நடிகர் விஜயின் வரவு மற்றவர்களின் அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
எவ்வளவு சொன்னாலும் எடப்பாடி பழனிசாமி திருந்த மறுக்கிறார். ஒன்றிணைக்கவில்லை என்றால் கழகம் மோசமான நிலைக்கு போய்விடும். இப்படியே இருந்தால் 2026ல் 26 சீட்டுக்களைக்கூட வெல்ல முடியாது. எடப்பாடி திருந்தாவிட்டால் இயக்கம் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.
ஜெயலலிதா அம்மா இறந்தபோது அதிமுக வெற்றிடம் என ரஜினிகாந்த் சொல்லியிருந்தார். அப்போது அதனை எதிர்த்தேன். இப்போது மனப்பூர்வமாக அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஜெயலலிதா இல்லாமல் அதிமுக வெற்றிடமாக இருக்கிறது. சசிகலா நான்கு, ஐந்து வருடங்களாக கட்சியை ஒன்றிணைப்பதாக பேசி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி தானாக திருந்தாவிட்டால் மக்கள் அவரை திருத்த நேரிடும்” என்றார் சசிகலா.