தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் எடுத்து, ஒப்பந்தத்தின் அடிப்படையில் 80 தூய்மைப் பணியாளர்களை வைத்து துப்புரவு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நாட்டு மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகை கொண்டாடிய நிலையில், நாங்கள் மட்டும் கொண்டாடவில்லை எனக் கூறி, தூய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தின் முன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 520 டன் அளவில் குவிந்த குப்பை.. அகற்றும் பணியில் திருச்சி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்!
இவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய குடியரசு தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஜெகநாதன் கூறுகையில், “நகராட்சி ஊழியர்களுக்கு அனைத்து பகுதிகளிலும் தீபாவளி சம்பளத்துடன் போனஸ் வழங்கப்பட்டது. ஆனால், பெரியகுளம் நகராட்சியில் சம்பளம் மற்றும் போனஸ் வழங்காததால் இந்த தீபாவளி பண்டிகையைக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.
துப்புரவு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. பணியாளர்களின் சம்பளத்தில் வருங்கால வைப்பு நிதி (Provident Fund), இ.எஸ்.ஐ உள்ளிட்டவை பிடித்தம் செய்யாமல் நகராட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. எனவே, முறைகேடாக செயல்படும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை ரத்து செய்து, பணியாளர்களுக்கு சம்பளத்துடன் போனஸ் வழங்கப்பட வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.