கோவை: கோவையில் உள்ள வ.உ.சி வன உயிரியல் பூங்கா அங்கீகரிக்கப்பட்ட உயிரியல் பூங்காவாக மற்றம் பெரும் போப்பை மத்திய அரசு மறுத்து உத்தரவிட்டது. இதனையடுத்து, இங்கு பராமரிக்கப்படும் அட்டவணை வன உயிரினங்களை வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என சென்னை முதன்மை வனப் பாதுகாவலர், தலைமை வன உயிரினக் காப்பாளர் ஆணை பிறப்பித்தனர்.
எனவே, இது தொடர்பாக வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருக்கும் அட்டவணை வன உயிரினங்களை வனத்திற்கு மாற்றம் செய்யும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, கடந்த மே மாதம் இங்கிருந்த புள்ளி மான்கள் வனத்திற்குள் விடுவிக்கபட்டது.
இந்நிலையில், இன்று வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருந்து 5 கடமான்கள் மினி லாரி வாகனம் மூலம் கூண்டு கட்டமைப்பில் சிறுவாணி மலை அடிவாரத்தில் இருக்கும் சிறுவாணி பில்டர் ஹவுஸ் வனச்சரகத்தில் விடுவிக்கப்பட்டது. இதை கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை வனமண்டல வனக் கால்நடை அலுவலர், கோவை வ.உ.சி வன உயிரியல் பூங்கா இயக்குனர் ஆகியோர் தலைமையில் வழிநடத்தப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராக் கூறுகையில், “கடமான்கள் மாற்றம் செய்ய திட்டமிட்டதிலிருந்து, அதன் கழிவுகளை வண்டலூர் ஆய்வகத்திற்கு அனுப்பி கடமான்களுக்கு காசநோய் தொற்று எதுவும் இருக்கிறதா என்று சோதனை செய்து அறிக்கை பெறப்பட்டுள்ளோம். இதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் முதல் மான்களுக்கு அடர் தீவனங்கள் உணவளிப்பதை நிறுத்திவிட்டு, சிறுவாணி மலை அடிவாரப் பகுதிகளில் கிடைக்கும் பச்சைத் தீவனங்கள் உண்ணும் மாற்று வழிக்கு பழக வைத்துவிட்டோம்.
எனவே, தற்போது கடமான்கள் வனப்பகுதியில் தீவனம் உட்கொள்ளும் முறை, நீர் அருந்தும் முறை பற்றி சற்று பழகியிருக்கும். மேலும், அவை வனப்பகுதிக்குள் இருக்கும் மான்களுடன் இணைந்து இருக்கப் போவதால் தேவையான உணவுகளை தேடி எடுத்துக் கொள்ளும். இந்த கடமான்களின் ஆரோக்கியத்தை தனிக்குழு அமைத்து கண்காணித்தும் வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: கோயில் - மலை - ஆறு.. டோராவின் பயணம் போல் ஊரை வலம் வந்த காட்டு யானை!