சேலம்: சேலம் மாவட்ட காவல்துறை ஆணையராக இருந்த விஜயகுமாரி மாநில ஆயுதப்படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, திருப்பூர் மாநகர காவல் ஆணையாளராக இருந்த பிரவீன்குமார் அபினபு சேலம் மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.
இதன்படி, சேலம் மாநகரின் காவல் ஆணையாளராக பிரவீன்குமார் அபினபு இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு, “மாநகரில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க சீரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றச் சம்பவங்களை தடுக்கவும், கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருட்கள் முற்றிலும் ஒழிக்கவும், சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் காவல் நிலையத்தில் குறைகளை தெரிவித்தால் காவல் நிலைய அதிகாரிகளால் பிரச்னைகளை ஆராய்ந்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சேலம் மாநகரில் ரவுடி பட்டியல் எடுக்கப்பட்டு, குற்றச் சம்பவங்கள் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. காவல்துறையின் முக்கிய அங்கமாக உள்ள சிசிடிவி கேமராக்களின் பழுதுகளை நீக்கி, மாநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் செயல்பட உரிய நடவடிக்கை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் நேசிக்கும் காவல்துறையாக சேலம் மாநகர காவல் துறை செயல்படும்” என்று பிரவீன் குமார் அபினபு கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!