சேலம்: சேலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை பணி நீட்டிப்பு செய்ய பல்கலைக்கழக தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக தொழிற்சங்கத்தினர் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு 500 பக்க ஆவணங்களுடன் மனு ஒன்றினை அளித்துள்ளனர்.
இந்த மனுவில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை முதல் பணியாற்றி வருகிறார். இவர் மீது பல்கலைக்கழகத்திற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல், பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றாதது, விதிமுறைகளை மீறி தனிப்பட்ட பயணங்களுக்கு பல்கலைக்கழக பணத்தைச் செலவழித்தது, அரசின் அனுமதி இல்லாமல் பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனம் தொடங்கியது, தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களை மிரட்டி பணியிடை நீக்கம் செய்தது போன்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான புகார்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த மாத இறுதியுடன் ஓய்வு பெற இருந்த ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, ஊழல், விதிமீறல், முறைகேடுகள், குற்ற வழக்குகளில் சிக்கிய துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது என பல்கலைக்கழக தொழிற்சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் சேர கால அவகாசம் நீட்டிப்பு!