சென்னை: சேலம் கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் துணைவேந்தராக 2021ஆம் ஆண்டு முதல் ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக பணியாளர்கள் முன் வைத்தனர். குறிப்பாக, தனியார் நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் நிதிகளை மோசடி செய்ததாக இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
ஆளுநர் - வேந்தர் திரு. ஆர்.என்.ரவி, அவர்கள் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் இரா .ஜெகநாதன், அவர்களின் பதவிக்காலத்தை நீட்டித்துள்ளார். pic.twitter.com/aIjhhGjJnJ
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) June 29, 2024
இந்தப் புகாரின் பேரில் கடந்த டிசம்பர் மாதம் கருப்பூர் காவல்துறையினரால் ஜெகநாதன் கைது செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, துணைவேந்தர் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். தொடர்ந்து, பணியிடை நீக்கம் செய்யப்படாமல் துணை வேந்தராகவே தொடர்ந்தார். இதனையடுத்து, அவர் மீது தொடர்ந்து நிதி முறைகேடு புகார்கள் எழுந்து வந்ததால், ஜெகநாதனை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக் காலத்தை அடுத்த ஆண்டு மே 19ஆம் தேதி வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். நாளையுடன் ஜெகநாதனின் பதவிக் காலம் முடிவடைய இருந்த நிலையில், பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
முன்னதாக, பெரியார் பல்கலைக்கழகத்தில் விதிமீறல் குற்றச்செயலில் ஈடுபட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளரை தமிழக அரசு உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் எஸ்.சி.எஸ்.டி ஆசிரியர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட்டியலின பேராசிரியைக்கு துறைத்தலைவர் பதவி வழங்க மறுப்பா? - சேலம் பெரியார் பல்கலையில் புதிய சர்ச்சை!