சேலம்: சமூகத்தில் நடைபெற்றுவரும் குற்றச் சம்பவங்களை தடுக்க தமிழக போலீசார் பெரும்பாடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சைபர் குற்றங்களை தடுக்கும் ஒரு புதிய யுத்தியை தமிழக காவல்துறை கையில் எடுத்தது. அதாவது, சைபர் குற்ற சம்பங்களை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த, குறும்பட போட்டி ஒன்றை அறிவித்தது.
தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினருக்கு இடையே நடந்த குறும்பட போட்டியில் சேலம் மாநகர போலீசார் 2 குறும்படத்திற்கு முதல் பரிசை பெற்றுள்ளனர். இந்த குறும்படத்தை கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தயாரித்துள்ளார். மேலும், இதை சினிமா இயக்குநர் தமிழ்ச்செல்வன் இயக்கியுள்ளார். அதற்காக அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் எஸ்.ஐ, எஸ்.எஸ்.ஐ அனைவரும் நடித்து அசத்தி, அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளனர்.
முதல் பரிசை வென்ற குறும்படம்:
பொதுமக்களின் ஆசையை தூண்டி மோசடி செய்வது குறித்த விழிப்புணர்வு குறும்படத்தில், மோசடி கும்பலின் தலைவன் ஒரு நாயை பிடித்து வந்தால் ரூ.5 ஆயிரம் தருவதாகவும், 2வது முறை ரூ.10 ஆயிரம் தருவதாகவும் கூறுகிறான். இவ்வாறு அனைத்து நாய்களும் பிடிபட்ட பின்னர் ஒரு நாயை கொண்டு வந்தால் தலா ரூ.1 லட்சம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறுகிறான்.
அதனால், ஒரு லட்சத்திற்கு ஆசைப்பட்டு, ரூ.50 ஆயிரத்துக்கு ஒரு நாயை வாங்கிக் கொடுத்தால், ரூ.1 லட்சம் பெறலாம் என்ற பேராசையில், அனைவரும் ஐம்பதாயிரத்தை கொடுத்து நாயையும் வாங்குகின்றனர். மறுநாள் நாயைக் கொடுத்து ஒரு லட்சம் ரூபாய் பெறலாம் என அலுவலகம் செல்லும்போது கடையை மூடிவிட்டு, அந்த நபர் பணத்துடன் தலைமறைவாகிவிட்டது தெரிய வருகிறது. அதன் பின்னர் தான் அனைவரும் ஏமாற்றப்பட்டது தெரிய வருகிறது. இக்குறும்படம் முதல் பரிசை தட்டி சென்றுள்ளது.
அதேபோல, சிறு குழந்தைகளுக்கு தாய் 'குட் டச்' (Good Touch) என்றால் என்ன? 'பேட் டச்' (Bad Touch) என்றால் என்ன என்பதை விளக்குகிறார். தவறான இடத்தை யார் தொட்டாலும் உடனடியாக தாயிடமோ அல்லது நம்பிக்கையானவர்களிடமோ வந்து சொல்ல வேண்டும் என்றும், பள்ளி செல்லும் குழந்தைகளை தவறாக தொடுவதை குழந்தைகள் கண்டிப்பதோடு மட்டுமின்றி, 1098 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் அதில் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
2ம் பரிசு: ஆன்லைன் மோசடி குறித்த குறும்படமும், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் குறித்த விழிப்புணர்வு குறும்படமும் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளது. ஆன்லைன் மோசடி குறித்த குறும்படத்தில் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து போலீசாரும் சிறப்பாக நடித்து அசத்தியுள்ளனர்.
சேலம் மாநகர காவல் துறை தயாரித்த குறும்படம் ஒட்டுமொத்த சாம்பியன் பரிசுகளையும் பெற்று அசத்தியுள்ளது. தற்போது இதற்கான பரிசு சென்னையில் வழங்கப்பட்டது. பரிசு பெற்ற போலீசாருக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, துணை கமிஷனர் மதிவாணன் பிருந்தா மற்றும் காவல்துறை அதிகாரிகள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.