சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே அமைந்துள்ள பாலமலை, எடப்பாடி, தின்னப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த சிறுத்தையானது மலைப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு புகுந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளும் வேட்டையாடுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குழந்தைகள், பெண்கள் என பலரும் மாலை நேரங்களில் கூட வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு அச்சப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் மேட்டூர், தின்னப்பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதும், கால்நடைகளை சேதப்படுத்துவதும் வனத்துறையால் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட வனத்துறை அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு, சிறுத்தையைக் கண்காணித்துப் பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, மேட்டூர் பகுதியில் மக்களை அச்சுறுத்திவரும் சிறுத்தையைப் பிடிக்க 6 கூண்டுகள், 16 கண்காணிப்பு கேமராக்கள், 3 டிரோன் கேமராக்கள் கொண்டு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், 80 வனத்துறையினர் இரவு, பகல் என 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் அச்சுறுத்தி வரும் சிறுத்தையை உடனடியாகப் பிடிக்க வேண்டும், வனவிலங்குகள் ஊருக்குள் நுழையாதவாறு ரோந்துப் பணிகளில் ஈடுபட வேண்டும் எனக் கூறி கொளத்தூரில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கெடுபிடி; முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு சிக்கல்! -
இதனையடுத்து வனத்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், நேற்று இரவு சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்துள்ள தின்னப்பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக வனத்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வெள்ளக்கரட்டூர், புதுவேலமங்களம் கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது சிறுத்தையின் நடமாட்டம் குறித்தும், சிறுத்தையைப் பிடிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் வனத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், தேவைக்கேற்ப கூடுதலான கூண்டுகள் வைத்து கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். அதேபோன்று, வனத்துறையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங் ரவி, மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி, உதவி வனப் பாதுகாவலர் செல்வக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.