சேலம்: இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை தமிழக அரசு நிர்ணயித்து, அதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் அண்மையில் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு 19 நிறுவனங்களுடன் 7616 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவை கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று முதலமைச்சர் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை காணொலி காட்சி வாயிலாக இன்று (திங்கள்கிழமை) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர். கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மினி டைடல் பூங்கா: தஞ்சாவூர் மாவட்டமபிள்ளையார்பட்டி கிராமத்தில் 30 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 55,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவிகித தள ஒதுக்கீடு தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மினி டைடல் பூங்கா: சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், ஆனைக்கவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் 29 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 55,000 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் 71 சதவிகித தள ஒதுக்கீடு தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது.
டைடல் பூங்காக்களில் உள்ள வசதிகள்: மினி டைடல் பூங்கா கட்டடங்களில் தலா 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டட மேலாண்மை வசதிகள், மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை வசதிகள், 24X7 பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மினி டைடல் பூங்காக்கள் திறக்கப்பட்டதன் மூலமாக தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும் என எதிர்பார்கப்படுகிறது.
இதையும் படிங்க: சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை.. மயிலாடுதுறை மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!