கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், இன்று (மே 20) கோவை முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் மலரவன் மறைவிற்கு, அவரது இல்லத்திற்குச் சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து அவர் விமான மூலம் சென்னை கிளம்பினார். அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எடப்பாடி பழனிசாமியை கோவை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார்.
பின்னர், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து எஸ்.பி வேலுமணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "தேர்தல் விதிமுறை இருப்பதால் அதிகமாக பத்திரிகையாளர்களை சந்திக்க முடியவில்லை. எடப்பாடி பழனிச்சாமி சென்னை சென்றார். அவரை வழியனுப்ப வந்தோம். தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் இன்னும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை. கோவை மாவட்டத்தில் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள்தான் இன்னமும் செயல்பாட்டில் இருக்கின்றது. சீரான குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சமீபமாக ஊடகங்களில் தவறான செய்திகள் பரவி வருகின்றன. எனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் பிளவு என எழுதுகின்றனர். எங்களுக்குள் எந்த குழப்பமும் கிடையாது. குழப்பம் ஏற்படுத்தியவர்கள் எல்லாம் வெளியே சென்றுவிட்டனர்.
அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என நினைக்கின்றனர். எப்பொழுது தேர்தல் வந்தாலும் அதிமுக ஆட்சி அமையும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி? - வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை! - Low Pressure In Bay Of Bengal