திருநெல்வேலி: திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தனசிங், கடந்த சில தினங்களுக்கு முன்பாக காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், இன்று கரைசுத்து புதூர் தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இவரது மரணம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனக் கூறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜெயக்குமார் தனசிங் புகார் அளித்ததாக கடிதம் வெளியாகி இருக்கிறது.
அந்த கடிதத்தில் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் உள்ளிட்ட சிலரின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன், சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, "திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தனிப்பட்ட முறையில் எனக்கும், கட்சிக்கும் மிகப்பெரிய இழப்பு. அவர் எனக்கு மிக நெருங்கிய நண்பர். எங்கள் கூட்டணி வெற்றிகளுக்காக கடுமையாக உழைத்தவர். குறிப்பாக, நாங்குநேரி தொகுதியில் நான் போட்டியிட்ட போது உறுதுணையாக இருந்தவர். எனது வெற்றிக்கு பாடுபட்டவர்" என்றார்.
தொடர்ந்து, பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக உங்கள் மீது புகார் உள்ளது என்ற கேள்விக்கு, "அதில் உண்மை இல்லை. எனக்கும், அவருக்கும் எந்த ஒரு குடுத்தல் வாங்கலும் கிடையாது. என் மீது பழி போட வேண்டும் என்றே, யாரோ பின்புலமாக இருந்து செயல்படுவதாக நான் நினைக்கிறேன். நாங்கள் அண்ணன் தம்பியாக பழகினோம். காவல்துறையின் விசாரணையில் அனைத்தும் தெரிய வரும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கரை கைது செய்து சென்ற கார் விபத்து.. சவுக்கு சங்கருக்கு காலில் காயம் எனத் தகவல்? - Savukku Shankar