சென்னை: மாநில அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. எம்.பி.சி. பிரிவில் வரும் வன்னியர்களுக்கு இப்பிரிவினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டிலிருந்து உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.
10.5வன்னியர்களுகான இட ஒதுக்கீடு அவர்களின் படிப்பு வேலை வாய்ப்புகளில்
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) August 3, 2024
இப்பொழுது கிடைக்கும் வாய்ப்புகளை விட குறைவு என்று தொடர்ந்து நான் கூறிவந்த நிலையில்
இன்று தரவுகள் மூலம் நிரூபணம்
திரு ராமதாஸ் மற்றும் அன்புமணி வன்னிய சமுதாய மக்களை இனியும் ஏமாற்ற வேண்டாம்@dt_next @kkbluffs pic.twitter.com/q7fVGRrhee
ஆனால் இது தொடர்பாக கொண்டயன் கோட்டை மாணவர் சங்கம் என்ற அமைப்பு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையத்திடமிருந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இது தொடர்பாக அந்த சங்கத்தைச் சேர்ந்த பொன் பாண்டியன் கூறுகையில், "மருத்துவம், முதுகலை போன்ற படிப்புகள் மட்டுமின்றி காவல்துறை, ஆசிரியர் தேர்வு, மருத்துவப் பணியாளர் தேர்வு போன்ற அரசு வேலைகளிலும் , குறிப்பிட்ட 10.5 சதவீதத்திற்கு அதிகமாக வன்னியர்கள் பணியில் அமர்கின்றனர்" என்கிறார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த பதிலின்படி 2018 முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 24,330 மாணவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான (MBC/DNC) இடஒதுக்கீட்டின் கீழ் 4,873 பேர் மருத்துவக் கல்வியிடம் பெற்றுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேல் அதாவது 11.4 (2,781) சதவீதம் பேர் வன்னியர் மாணவர்கள். 5.8 சதவீதம் பேர் (1,414) வன்னியர் அல்லாத பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 678 மாணவர்கள் சீர் மரபினர் (DNC) பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இதன் மூலம் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் கோரிக்கை பொருளற்றது என்பது நிரூபணமாகியுள்ளதாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. செந்தில் குமார் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு என்பது இச்சமூகத்தினர் பெறும் வாய்ப்புகளை சுருக்குவதாக அமைந்து விடும் என்பது திமுகவின் கருத்தாக உள்ளது.
இதேப் போன்று முதுகலை மருத்துவக் கல்வியிடங்களில் எம்.பி.சி. பிரிவினருக்கான 1,363 இடங்களில் வன்னியர் மாணவர்கள் 694 (10.2%) இடங்களைப் பெற்றுள்ளனர். இதர எம்.பி.சி. மாணவர்கள் மற்றும் சீர்மரபினர் முறையே 9.1 % (636) மற்றும் 4 % (279) இடங்களைப் பெற்றுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பணிகளில் சேர்ந்த வன்னியர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது இன்னமும் எளிதாக விளக்குவதாக அமையும் என்கிறார் பொன்பாண்டியன். 2013 முதல் 2022 வரை சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் பணியமர்த்தப்பட்ட 1,919 (MBC) உதவி ஆய்வாளர்களில் (sub-inspectors) 17 சதவீதம் பேர் வன்னியர் சமுதாயத்தினர்.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் இதே காலத்தில் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 8,379. இவர்களில் எம்.பி.சி கோட்டாவினுள் வருவோரில் 1,185 பேர் அதாவது 10.9 சதவீதம் பேர் வன்னியர்கள். மொத்த பணியிடங்களில் 17.1 சதவீதம் பேர் வன்னியர்கள் தேர்வாகியுள்ளனர்.
2021ம் ஆண்டில் மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் எம்.பி.சி. கோட்டாவில் பணியமர்த்தப்பட்ட 634 ஆசிரியர்களில் 383 பேர் வன்னியர் சமுதாயத்தினர். மொத்த பணிவாய்ப்பில் 17.5 சதவீதம் வன்னியர்களுக்கு கிடைத்துள்ளது.
2012 முதல் 2023 வரையிலும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பணிகளுக்கு தேர்வானவர்கள் குறித்த விவரங்களும் கிடைத்துள்ளன. இதில் எம்.பி.சி. கோட்டாவில் 11.2 சதவீத இடங்கள் வன்னியர்களுக்கு கிடைத்துள்ளன. குறிப்பாக 2013 முதல் 2018 வரையிலான கால கட்டத்தில் மொத்த பணியிடங்களான 2,682 ல் 366 இடங்கள் அதாவது 13.6 சதவீத இடங்கள் வன்னியர் தேர்வர்களுக்கு கிடைத்துள்ளன.
குரூப் 4 பணியிடங்களில் 2013 முதல் 2022 வரையிலான நியமனங்களை கணக்கிடும் போது, வன்னியர்கள் 19.5 சதவீதத்திற்கு வேலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் ஆவணம் குறிப்பிடுகிறது.
நீதிதித்துறை சார்ந்த பணியிடங்களில், 2013 முதல் 2022 வரையிலான காலத்தில் 79 பேர் எம்.பி.சி. பிரிவின் கீழ் நீதிபதிகளாக தேர்வாகியுள்ளனர். இவர்களில் 39 பேர் அதாவது 9.9 சதவீதம் பேர் வன்னியர்கள். உள்இடஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் சுருங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் பொன்பாண்டியன் குறிப்பிடுகிறார்.
இதையும் படிங்க: இனி ரயில்கள் ஓடாது பறக்கும்..! 30 நிமிடத்தில் சென்னை to பெங்களூரு.. ஐஐடியின் ஹைப்பர்லூப் ஆராய்ச்சி