சென்னை: 18வது நாடாளுமன்றத் தேர்தல் இன்றுடன் முடிவடையும் நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதால், திமுக வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்களுடன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டத்தில் தி.மு.க சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., வாக்கு எண்ணிக்கையின் போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
பின்னர், அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, "வரும் 4ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று பாஜக எதை வேண்டுமானாலும் செய்யும். தேர்தல் பரப்புரை முடிந்த பின்னர், பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஆனால், அவர் கடவுளைப் போல அமர்ந்து தியானம் செய்வது போன்ற பிரச்சாரம், செய்தி ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இதுவரை எந்த ஜனநாயக நாட்டிலும் இப்படி நடந்தது இல்லை. மோடி தியானம் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட புகாரும் நிராகரித்துள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற உள்ள கட்சி என்ற அடிப்படையில், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்சியாக திமுக உள்ளது. அதனால் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்ற ஒரு மணி நேர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. நேற்று தேர்தல் ஆணையத்திற்கு திமுக கொடுத்த புகார் கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.
மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணனிற்கு நன்றி. அவர் மட்டும் தபால் வாக்கு இறுதியாக எண்ணப்படும் என பேசவில்லை என்றால் தபால் வாக்குகளை துவக்கத்திலேயே எண்ணிக்கை நடத்த வேண்டும் என நாங்கள் புகார் கொடுத்திருக்க முடியாது. அவர் பேசியது எங்களை விழிப்படையச் செய்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் வெயிலில் நின்று பிரச்சாரம் செய்துள்ளார். கட்சியினர் பாடுபட்டுள்ளனர். இது வீணாகி விடக்கூடாது என்பதில் விழிப்புடன் இருக்கிறோம். ஏனெனில், வெற்றி பெறக்கூடியவர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். அதனால் எதையும் எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது. மேலும், 4ஆம் தேதி திமுக வெற்றி பெறுவது உறுதி" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் 45 மணி நேர தியானம் நிறைவு! திருவள்ளுவருக்கு மாலை அணிவித்து மரியாதை! - PM Modi 45 Hour Meditation