சென்னை: சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களைs சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து திமுக மீது அவதூறு பரப்பும் வகையில் பேசி வருகிறார். தமிழகத்தில் போதைப்பொருள் தலை விரித்து ஆடுவதாகவும், அதனுடன் முதல்வர் குடும்பத்துக்கு தொடர்பு இருப்பதாகவும் அவதூறு பரப்புகிறார். விளக்கம் அளித்த பிறகும், தொடர்ந்து அவ்வாறு பேசுவதால் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜாபர் சாதிக்கிற்கும் திமுகவுக்கும் தொடர்பு இருப்பது போல பழனிசாமி பேசுகிறார். அதிமுக ஆட்சியில் 2013-இல் ஜாபர் சாதிக் மீது தொடரப்பட்ட வழக்கில் 2017ல் எடப்பாடி முதல்வராக இருந்தபோது ஜாபர் சாதிக் விடுதலை செய்யப்பட்டார். அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி நியமித்த அரசு வழக்கறிஞர் சீனிவாசன்தான்.
அவர் வழக்கை திசை திருப்பி, ஒழுங்காக நடத்தாமல் போனதால் ஜாபர் சாதிக் விடுதலையானார். அதன் காரணமாக, அந்த வழக்கறிஞர் பார் கவுன்சிலில் இருந்து நீக்கப்பட்டார். ஜாபர் சாதிக்கிற்காக ஆஜரானவர் இன்று பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பால் கனகராஜ்.
ஆட்சி மீது மக்கள் வைத்துள்ள நல்ல நம்பிக்கையினாலும், கருத்துக்கணிப்பு திமுகவிற்கு ஆதரவாக வருவதாலும் திட்டமிட்டு மக்கள் கவனத்தை திசைதிருப்ப எடப்பாடி முயற்சிக்கிறார். பாஜக ஆளும் குஜராத்தில் உள்ள அதானியின் துறைமுகத்தில் இருந்துதான் இந்தியாவிற்குள் போதைப்பொருள் வருகிறது. குஜராத்தில்தான் எடப்பாடி பழனிசாமி மனிதச் சங்கிலி நடத்தி இருக்க வேண்டும்.
என்.ஐ.ஏ போன்ற பெரிய அமைப்புகளை வைத்திருக்கும் மத்திய அரசாங்கத்தையே ஏமாற்றியதை போல, ஜாபர் சாதிக் திமுகவையும் ஏமாற்றியுள்ளர். அவர் திமுகவில் வகித்தது பெரிய பொறுப்பு அல்ல, ஒரு அணியில் இருந்த 3, 4 துணை செயலாளர்களில் அவரும் ஒருவர். செயலாளர்களுக்குத்தான் திமுகவில் அதிகாரம் உண்டு. உளவுத்துறை, காவல்துறை போல நாங்களும் ஜாபர் சாதிக்கால் ஏமாற்றப்பட்டு விட்டோம்.
உளவுத்துறை, மத்திய அரசையே ஏமாற்றும் ஒருவன், ஆஃப்ட்ரால் எங்களை ஏமாற்ற முடியாதா? திமுகவில் அணி பொறுப்பாளர்களை முதல்வரோ, உதயநிதியோ தேர்வு செய்து நியமிப்பதில்லை. மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைப்படிதான் நியமனம் செய்யப்படுகின்றனர். அது ஒன்றும் பெரிய பதவி இல்லை, துணை அமைப்பாளர் பதவிதான். அது பத்தோடு பதினொன்று.
எடப்பாடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நபர் ஒருவர், மடாதிபதியை மிரட்டி பணம் கேட்டுள்ளார், எடப்பாடி அனுப்பி கேட்டார் என நான் கூற முடியுமா? புகைப்படம் இருப்பதால் அவருக்கும், திமுகவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறுவது தவறு. அரசியலில் சிலர் புகைப்படத்தில் தங்கள் படம் வர வேண்டும் என்பதால் தலைவர்கள் அருகே வந்து நிற்பார்கள்.
12 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஒரு போதைப்பொருள் கடத்தல்காரரை அமித்ஷா பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார். இஸ்லாமிய கர்ப்பிணியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரது 3 வயது மகளை கொன்ற நபர் சிறையில் இருந்து வெளிவந்தவுடன் பாஜக தலைவர்கள் மாலையிட்டு வரவேற்பு அளித்தனர். இதையெல்லாம் மறந்து விட்டு, எங்களை பழனிசாமி விமர்சிப்பது பாஜகவின் அடிமையாகத்தான் எடப்பாடி இன்னும் இருக்கிறார் என்று தெரிகிறது. திமுக எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தையே நம்பும்.
போதைப்பொருள் கடத்துவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்து வருகிறோம். திமுக ஜாபர் சாதிக்கிடம் பணம் பெற்றதாக கூறுவது தவறு. அது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு. மங்கை படத்திற்கு ஜாபர் சாதிக் பணம் கொடுத்ததாக கூறுவது தவறு. அது குறித்த போட்டோ, வீடியோ ஆதாரங்கள் கிராபிக் செய்யப்பட்டதாக இருக்க முடியும். எனவேதான் போட்டோ, வீடியோ ஆதாரங்கள் சட்டப்படி ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த சிக்கலும் இல்லை: பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி, தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே ஆளுநருக்கு முதல்வர் கடிதம் எழுதிவிட்டார் என்பதால், இனி தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் கூட பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த சிக்கலும் இல்லை. செந்தில்பாலாஜி வழக்கில் அமைச்சர் நியமனம் முதல்வர் அதிகாரத்திற்கு உட்பட்டது என நீதிமன்றம் கூறியுள்ளது.
போதைப்பொருள் வழக்கு மக்களவைத் தேர்தலில் சத்தியமாக எதிரொலிக்காது. எங்கள் மீதான குற்றச்சாட்டை பார்த்துக் கொண்டு திமுக பேச்சாளர்கள் சும்மா இருப்பார்களா? தெளிவாக பதில் சொல்வார்கள். மக்கள் தெளிவாக உள்ளனர். நாங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால் போதைப்பொருள் வழக்குகள் வெளியில் வராமல்தான் இருக்கும்.
இன்னும் 10, 15 நாள்தான். அமலாக்கத்துறை தற்போது சோதனை மேற்கொள்வோரின் வீடுகளில் சோதனை நடத்த முடியும். மே.27 க்கு பிறகு இப்போது ஆட்சியில் இருப்போரின் வீடுகளுக்கு அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொள்ள செல்வார்கள்.
மோடி அடிக்கடி வரவேண்டும்: மோடி அடிக்கடி சென்னை வருவது எங்களுக்கு நல்லதுதான். மோடி எப்போதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டைதான் வைப்பார். நகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பொறுப்புக்கு போட்டியிடுவோர் போல, தமிழகத்திற்கு அடிக்கடி பிரதமர் மோடி வருகிறார். அவர் வர வர எங்கள் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும், அவரிடம் பணிவுடன் நாங்கள் கேட்பது அடிக்கடி வரவேண்டும் என்பதுதான்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பிரதமர் குறித்துப் பேசியது சரியில்லைதான். ஆனால் வேண்டுமென்றே பிரதமர் குறித்து அவர் எந்த கருத்தையும் சொல்லவில்லை. கிழிச்சுதுவேன், தொலைச்சுடுவேன், பிச்சுடுவேன் என்பதெல்லாம் ஒரு ஸ்லாங் (slang).
ஜெயலலிதா இறந்து 24 மணி நேரத்திற்குள் சசிகலா முதல்வர் ஆவதாக இருந்தது, ஆனால் அப்போதைய ஆளுநர் மகாராஷ்டிரத்திலேயே இருந்தார். தமிழகத்திற்கு ஒரு வாரம் வரவே இல்லை, பின்னர் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இதையெல்லம் அதிமுக சுரணையோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.
பொன்முடி அமைச்சர் ஆவதை ஆளுநர் தாமதப்படுத்தினால், நாங்கள் நீதிமன்றம் சென்று சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். ஏற்கனவே அவர் பல குட்டு வாங்கி இருக்கிறார். இன்னொரு குட்டு வாங்க அவர் தயார் என்றால், நாங்களும் சந்திக்கத் தயார்” என பேசியுள்ளார்.