சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி டெல்லியில் உள்ள இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், "நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு திமுக வேட்பாளர்கள் மற்றும் திமுகவின் முன்னணித் தலைவர்களின் செல்போன்களின் உரையாடல்களை மத்திய அரசின் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற மத்திய அரசின் ஏஜென்சிகளால் சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்கப்படுகின்றன.
மத்திய அரசின் ஏஜென்சிகள் சட்ட விரோதமான மென்பொருளைப் பயன்படுத்தி இத்தகைய செயலில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. செல்போன் உரையாடல்களைச் சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்பது ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கிறேன்.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும், மாநிலத்தின் பாதுகாப்பிற்கும், சட்டம் ஒழுங்கு போன்ற நோக்கங்களுக்காகத் தவிர, செல்போன் உரையாடல்களை எந்த அதிகாரியும் ஒட்டுக் கேட்க முடியாது. ஆனால் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் திமுக தலைவர்களின் செல்போன் உரையாடல்களைச் சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்கின்றனர்.
சுதந்திரமான மற்றும் நியாயமான வகையில் தேர்தலை நடத்துவோம் என்று சொல்லி வரும் தேர்தல் ஆணையம் இந்த ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும்.
விசாரணை நடத்தி ஒட்டுக் கேட்பு விஷயத்தைப் பகிரங்கப்படுத்துவது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். மேலும், நாடாளுமன்றத் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் நடைபெறும் என்பதையும் உறுதி செய்ய வேண்டும்" என ஆர்.எஸ்.பாரதி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நெசவாளர் வீட்டில் பாட்டு சேலை நெய்தல்.. மாடு வண்டு ஊர்வலம் என அனல் பறக்கும் பிரசாத்தில் பா.ம.க வேட்பாளர்..! - Lok Sabha Election 2024