சென்னை: சென்னை விமான நிலையத்தில் சட்டவிரோதமாகத் தங்கம், உயர் ரக போதைப் பொருள்கள், உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் சுமார் 30 வயது உடைய ஆண் பணியாளர் ஒருவர்.
தனது இரவு பணியை முடித்துவிட்டு, நேற்று காலையில், விமான நிலைய ஊழியர்கள் வெளியேறும் வாசல் வழியாக வந்துகொண்டு இருந்தார். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள், அந்த விமான நிலைய ஒப்பந்த ஊழியரை நிறுத்தி சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
இதனையடுத்து அவர் அணிந்த இருந்த ஷூவை கழற்றுமாறு பாதுகாப்புப் படை வீரர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஒப்பந்த ஊழியர், ஷூவை கழற்ற மறுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சந்தேகம் அடைந்த வீரர்கள், அவரை தனி அறைக்குச் சென்று முழுமையாகச் சோதனை செய்தனர்.
அப்போது அவர் காலில் அணிந்திருந்த ஷூக்குள் மூன்று சிறிய பார்சல்கள் இருந்தன. அவைகளைப் பிரித்துப் பார்த்த போது, தங்கப் பசை இருந்ததைக் கண்டுபிடித்தனர். அதில் 1.281 கிலோ தங்கப் பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.85 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒப்பந்த ஊழியரையும், தங்கப் பசையையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து ஒப்பந்த ஊழியரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,"துபாயிலிருந்து, இன்று அதிகாலை சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் கடத்திவரப்பட்ட இந்த தங்கப் பசை பார்சல்களை, விமான நிலைய கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு, கடத்தல் ஆசாமி, வெளியே சென்று விட்டார்.
அவர் இந்த விமான நிலைய ஒப்பந்த ஊழியரிடம் தகவல் தெரிவித்து, தான் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் காத்திருப்பதாகவும், அந்தத் தங்கப் பசை பார்சல்களை வெளியில் எடுத்து வந்து, தன்னிடம் கொடுத்தால், ரூ.5 ஆயிரம் கொடுப்பதாகக் கூறியதால், எடுத்துச் சென்றதாகவும் கூறினார். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் விமான நிலைய ஒப்பந்த ஊழியரைக் கைது செய்து, துபாயிலிருந்து, தங்கத்தைக் கடத்தி வந்த கடத்தல் ஆசாமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணி: ஏப்.29 வரை விண்ணப்பிக்கலாம் என டிஆர்பி அறிவிப்பு!