தஞ்சாவூர்: கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்த பையை ரயில்வே போலீசார் மீட்டு, தவறி விட்ட நபரின் உறவினரிடம் முறைப்படி ஒப்படைப்படைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செட்டிமண்டபம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (65). இவர் தனது நான்கு பேர் கொண்ட குடும்பத்தினருடன் புனே செல்ல அகமதாபாத் செல்லும் குளிர்சாதன வசதி கொண்ட விரைவு ரயில் பெட்டிக்கு முன்பதிவு செய்திருந்தார். இந்நிலையில் நேற்று முதலாவது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்த அவர்கள் தங்களுடன் கொண்டு வந்த ஒரு பையை நடைமேடையிலேயே விட்டு விட்டு ரயிலில் ஏறி சென்றுவிட்டனர்.
நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த பையை கும்பகோணம் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் செந்தில் வேலன் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குமார், ஜெகதீசன், முத்துலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் அதனை சோதனையிட்டனர். அதில் துணி மணிகளுடன் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: பட்டாக் கத்தியுடன் மிரட்டிய இளைஞர்கள்... அலறிய வியாபாரிகள்.. தேனியில் பரபரப்பு..!
இதையடுத்து தவற விட்ட நபர் குறித்து விசாரித்த போது, பையை தவற விட்டவர் செல்வராஜ் என்பது தெரியவந்தது. பின் அவரை தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் தான் பையை தவறவிட்ட நபர் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீடியோ காலில் ரயில்வே போலீசாரிடம் பேசி பையில் இருந்த பொருட்கள் குறித்து சரியாக அடையாளம் கூறியதை தொடர்ந்து பையை தவறவிட்டவர் கூறியது போல் அவரது வீட்டின் அருகில் வசிக்கும் அவரது உறவினரான செட்டிமண்டபம் விஜயகுமாரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்