திருவள்ளூர்: நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல், தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதல், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
அந்தவகையில், தேர்தல் விதிமீறல்களைத் தடுக்கவும், பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை வாக்காளர்களுக்கு வழங்குவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனைச்சாவடிகள் அமைத்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று (புதன்கிழமை) பட்டறைபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே நிலை கண்காணிப்புக் குழு சார்பில் பிரவீன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து வந்த வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அதில் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 2.15 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது.
இது குறித்த விசாரணையில் சென்னையில் உள்ள தனியார் நகைக்கடையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கடைக்கு நகைகளை மொத்தமாக கொண்டு சென்று அந்த கடைக்கு தேவையான நகைகளைக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள நகைகளை ஆந்திராவில் இருந்து மீண்டும் சென்னைக்கு கொண்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இருப்பினும் இதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் ரூ.1.25 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி மற்றும் வாசுதேவன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
இதன் பிறகு நடத்தப்பட்ட ஒரு மணி நேர விசாரணையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நகையை கொண்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது 50 ஆயிரத்திற்கு மேல் பணம், நகை உள்ளிட்ட எதை எடுத்து சென்றாலும் உறிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும், இல்லை என்றால் சோதனையின் போது அதிகாரிகளால் அவை பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: நாளை 7 பள்ளிகளுக்கு விடுமுறை.. பாதுகாப்புடன் 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள்!