தஞ்சாவூர்: தஞ்சை அடுத்த கரந்தை மிளகுமாரி செட்டி தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன் (40). இவர் தஞ்சை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவர் மீது தஞ்சையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அது மட்டுமல்லாமல், தஞ்சை நகர கிழக்கு காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் அறிவழகன் பெயர் உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு இவர் வீட்டில் இருந்தபோது, நண்பர்கள் வந்து அவரை வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அவர் தனது நண்பர்களுடன் சென்று அருகில் உள்ள புற்று மாரியம்மன் கோவில் தெருவில் இருக்கும் வடவாற்றங்கரையில் அமர்ந்து மது அருந்தி உள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அறிவழகனை சரமாரியாக வெட்டினர். அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற அவரை, அந்த கும்பல் தலை, கை உள்ளிட்ட இடங்களிலும் வெட்டியுள்ளனர். இதில் அறிவழகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதையும் படிங்க: பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை.. பதறிய திண்டுக்கல்.. போலீசார் தீவிர விசாரணை!
ஆனால், அறிவழகனை வெட்டிய போது ரத்தம் அருகில் இருந்த காரிலும் படிந்தது. பின்னர், இது குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், டவுன் டிஎஸ்பி சோமசுந்தரம், காவல் ஆய்வாளர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
தொடர்ந்து, அறிவழகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, கொலை நடந்த இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. மேலும், இது குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அறிவழகனைக் கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.