சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் 25% - 30% வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்யப்பட்ட நிலையில், இதன் மூலம் ஆருத்ரா கோல்டு தனியார் நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.2,438 கோடி முதலீட்டை பெற்றதாக தெரிகிறது.
இதையடுத்து இந்த நிறுவனம் கூறியபடி, பணத்தை தரவில்லை எனக்கூறி, பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, அந்த நிறுவனத்தில் இயக்குநர்களில் ஒருவரான ரூசோ உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ரூசோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்த நிலையில், அவரை ஜாமீனில் விடுவித்தது தவறு எனவும், இதனால் அவர் வெளியே இவ்வழக்கில் தொடர்புடைய சாட்சியங்களை கலைத்து விடலாம் எனவும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இவ்வாதங்களைக் கேட்ட நீதிபதி ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த ரூசோ தலைமறைவாகிவிட்டார். பின்னர், அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து வலைவீசித் தேடிவந்தனர்.
இந்நிலையில், ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான ரூசோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர். இவர் மீது 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கப்பட்ட நிலையில், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய இயக்குனர்களில் ஒருவரான ரூசோவை நீதிமன்ற உத்தரவு படி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேரளாவில் காணாமல் போன காரில் கஞ்சா கடத்தல்.. பெரம்பலூர் போலீசாரிடம் சிக்கிய 3 பேரின் பின்னணி என்ன? - Ganja Smuggling In A Missing Car