சென்னை: பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சேலம் விங்ஸ் ஆப் சயின்ஸ் அகாடமியின் நிறுவனத்தினர் ராக்கெட் தொழில்நுட்பச் செய்முறைப் பயிற்சி அளித்தனர்.
15 குழுக்களாகப் பிரிக்கப்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு குழுக்களும் ஒரு ராக்கெட் வீதம் தயாரிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மாதிரி ராக்கெட்களை தயார் செய்தனர். அதன் தொடர்ச்சியாக, பள்ளி மாணவ மாணவிகள் தயாரித்த மாதிரி ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், மாணவ மாணவிகள் தயாரித்த மாதிரி ராக்கெட்டுகளை இன்று (பிப்.22) மதியம் பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விண்ணில் ஏவி சோதனை செய்தனர். மேலும், மாணவர்கள் தயாரித்த மாதிரி ராக்கெட்டுகள் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் முன்னிலையில் விண்ணில் ஏவப்பட்டது.
இது குறித்து மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் மாணவ மாணவிகள் கூறும்போது, "ராக்கெட் தயாரிப்பு தொழில்நுட்பம் குறித்து அளிக்கப்பட்ட பயிற்சியால், நாங்கள் ராக்கெட்டுகளை தயாரித்தோம். அதனால் அது குறித்த அறிவும், ராக்கெட் தயாரிப்பதற்கான ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, இந்தப் பயிற்சி எங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுத்தது. விண்வெளித் துறை பற்றிய ஆர்வத்தையும் இது எங்களுக்குக் கொடுத்தது. விண்வெளித் துறை பற்றியும் இஸ்ரோ பற்றியும் நாங்கள் அதிகளவில் இந்தப் பயிற்சி வகுப்பில் கற்றுக் கொண்டோம்" எனத் தெரிவித்தனர்.
மேலும், இந்தப் பயிற்சி வகுப்பு குறித்து சென்னை கிருத்துவக் கல்லூரியின் முதல்வர் மனோகரன் கூறும்போது, எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விண்வெளித்துறை குறித்த ஆர்வத்தை வளர்ப்பதற்காக ராக்கெட் தயாரிப்பு குறித்து, சேலம் விங்ஸ் ஆப் சயின்ஸ் அகாடமியினர் பயிற்சி அளித்தது மாணவ மாணவிகள் மத்தியில் விண்வெளித் துறை பற்றிய ஆர்வத்தைத் தூண்டியுள்ளது" என்று பெருமையாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் நீலப்பொருளாதார வளர்ச்சி மாநாடு! பொதுமக்கள் கண்டு களிக்க அழைப்பு