திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்துக்கு, உட்பட்ட 31 வது வார்டில் உள்ள குல வணிகர்புரம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக சீரான குடிநீர் வழங்கப்பட்டதாகவும், கடந்த 11 நாட்களாக தொடர்ந்து குடிநீர் வரவில்லை எனவும், மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இதனை கண்டித்து 31 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் அமுதா சுந்தர் தலைமையில் பொதுமக்கள் காலி குடத்துடன் இன்று (ஆகஸ்ட் 7) நெல்லையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுவாகவே போக்குவரத்து அதிகமாக இருக்கும் இந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் இடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இருதரப்பினரையும் சமரசம் செய்த மாநகராட்சி அதிகாரிகள் இன்று மாலைக்குள் குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஒகேனக்கல் தொங்கு பாலம் சேதம்.. சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை!