மதுரை: கை துடைக்க பயன்படுத்தப்படும் டிஷ்யூ பேப்பரில் எழுதப்பட்டு கிடைத்த மனு மீது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக நடவடிக்கை எடுத்த சம்பவம் குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அக்ஷய் சட்னலிவாலா என்ற தொழில் அதிபர் டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். அதே விமானத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பயணம் மேற்கொண்டார்.
இதனை அறிந்த அக்ஷய் சட்னலிவாலா, உடனே கை துடைக்கும் பேப்பரில் (Tissue Paper) அவரது கம்பெனியின் திடக்கழிவு பொருட்களை ரயில் மூலம் அனுப்ப உதவி செய்ய வேண்டும் என மனு கொடுத்தார். மத்திய ரயில்வே அமைச்சர் உடனடியாக கிழக்கு ரயில்வே பொது மேலாளரை அழைத்து தகுந்த உத்தரவுகள் பிறப்பித்தார்.
தொழில் அதிபர் அக்ஷய் விமானத்தில் இருந்து கொல்கத்தாவில் இறங்குவதற்கு ஆறு நிமிடங்களுக்கு முன்பாகவே கிழக்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் இருந்து திடக்கழிவு பொருட்களை ரயில் மூலம் அனுப்புவது சம்பந்தமாக எப்பொழுது ஆலோசிக்கலாம் என அலைபேசி வாயிலாக கேட்கப்பட்டது.
அவர் விருப்பத்தின்படி பிப்ரவரி 6 அன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கிழக்கு ரயில்வே பொது மேலாளர் மிலின்ட் கே தேவேஸ்கர், தலைமை முதன்மை வர்த்தக மேலாளர் சௌமித்ரா மஜும்தார், தலைமை முதன்மை ரயில் இயக்கம் மேலாளர் ஆர்.டி.மீனா மற்றும் தொழில் அதிபர் அக்ஷய் சட்னலிவாலா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர், ஒடிசாவில் உள்ள ராஜ்கங்காபூர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் திடக்கழிவு பொருட்களை ரயில் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை விடப்பட்டது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாக பொது மேலாளர் உறுதி அளித்தார்.
அதிக அளவில் திடக்கழிவு பொருட்கள் ரயில் போக்குவரத்து வாயிலாக அனுப்பப்படுவதன் மூலம் கழிவு பொருட்களின் மறு சுழற்சி விரைவாக மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும்" என தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: அபுதாபியில் இந்து கோயில்; கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி!